Published : 14 Dec 2020 02:12 PM
Last Updated : 14 Dec 2020 02:12 PM
குற்றாலம் அருவகளில் குளிக்க நாளை (15-ம் தேதி) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சாரல் மழையுடன் அருவிகளில் தண்ணீர் கொட்டும். மற்ற காலங்களிலும் மழை பெய்தால் அருவிகளில் நீர் வரத்து இருக்கும்.
குற்றாலம் அருவிகளில் குளிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சுற்றுலாத் தலங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, குற்றாலம் அருவகளில் குளிக்க நாளை (15-ம் தேதி) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
அருவிகளில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களை ஒழுங்குபடுத்தி அருவிகளில் குளிக்க அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு அருவிக்கும் ஒரு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. குழுவின் முடிவின்படி ஒவ்வொரு அருவியிலும் ஒரே சமயத்தில் எத்தனை எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களோ அதன் அடிப்படையில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் பயன்படுத்த வேண்டும். மேலும் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் 2 மீட்டர் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து அருவிகளுக்கு வருவதையும், அருவிகளில் இருந்து நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தபட்ட தட்டு, டம்ளர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்தையும் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் போட வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தனியார் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் கதவுகளை அடைத்து வைத்திருக்க வேண்டும்.
அருவிப் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். அருவிகள் மற்றும் இதர சுற்றுலா இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசின் அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
குற்றாலம் அருவிகளில் தற்போது குறைவான அளவில் தண்ணீர் விழுகிறது. அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குற்றாலம் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT