Published : 14 Dec 2020 01:28 PM
Last Updated : 14 Dec 2020 01:28 PM
அம்மா மினி கிளினிக்குகள் தமிழக அரசின் சாதனை கிரீடத்தில் ஒரு ரத்தினக் கல்லாகப் பிரகாசித்துக் கொண்டிருகிறது என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அம்மா மினி கிளினிக் தொடக்க விழாவில் இன்று (டிச.14) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
"ஏழை மக்களின் நல்வாழ்வினையும், அவர்கள் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதையும் உன்னதக் குறிக்கோளாகக் கொண்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சீரிய பல திட்டங்கள் தீட்டி திறம்படச் செயலாற்றி வருகிறது.
கொடிய நோயான கரோனாவால் உலகின் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டு அவற்றுடன் போராடி வரும் வேளையில் நம் நாட்டில் குறிப்பாக நம் தமிழகம் அந்நோய் தாக்குதலில் இருந்து மிக வேகமாக மீண்டு வந்திருப்பது பாராட்டுக்குரிய சாதனை. நோய்த்தொற்றின் உச்சமாக நாள் ஒன்றுக்கு 6,000-க்கும் மேல் இருந்த தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து நேற்று 1,000 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக அரசு இக்கரோனா நோய் கட்டுப்பாட்டில் நாம் கையாண்ட அணுகுமுறைகளையும் தீவிரத்தையும் வெகுவாக மனம் திறந்து பாராட்டியிருகிறார்.
தமிழக அரசு நோய்த் தொற்றுகளைக் கண்டறிவதில் காட்டிய மிக துரிதமான செயல்பாடு, மிகச் சிறந்த பரிசோதனைக் கருவிகள் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துகள் மூலம் வழங்கப்பட்ட துல்லியமான உயர்தர சிகிச்சை ஆகியவற்றால் இந்நோய் நம் கட்டுக்குள் வந்துள்ளது.
கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் கோவிட்-19, பெருந்தொற்று நோய் சீனாவில் கண்டறியப்பட்டவுடன், தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939-ன் கீழ் கரோனா வைரஸை நோய்த் தொற்றாக அறிவித்தது.
இந்நோயைத் தடுப்பதற்குத் தேவையான வழிகாட்டுதலைக் கொள்ளை நோய்சட்டம், 1897-ன் கீழ் இந்நோய்க்கான அறிவிக்கையை அன்றே அரசு வெளியிட்டது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை தேவையான தளர்வுகளுடன் பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்தி வருகிறது.
இதுவரை 228 பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு, நாட்டிலேயே அதிக அளவில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 70 ஆயிரம் ஆர்.டி - பி.சி.ஆர் பரிசோதனைகள் நமது தமிழ்நாட்டில்தான் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் இதில் 67 அரசு பரிசோதனை நிலையங்களை உள்ளடக்கியது என்கிற சாதனையையும் நிகழ்த்தியிருக்கின்றோம்.
கரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காகத் தேவைப்படும் உயிர் காக்கும் மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் குறிப்பாக பிபிஇ முழுக்கவச உடை, என் - 95 முகக்கவசங்கள், மும்மடிப்பு முகக்கவசங்கள் முதலியன துரிதமாக தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, களத்தில் பணியாற்றிக் கொண்டிருகின்ற களப் பணியாளர்களுக்குப் போதுமான அளவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 310 அரசு மருத்துவமனைகள் மற்றும் 343 தனியார் மருத்துவமனைகள் என 653 மருத்துவமனைகளில் 56 ஆயிரத்து 580 படுக்கை வசதிகள் மற்றும் 6,517 செயற்கை சுவாசக் கருவிகளுடன் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இதில் சென்னையில் மட்டும் 102 மருத்துவமனைகள் உள்ளன.
மேலும், சிறப்பு அம்சமாக தமிழ்நாட்டில் அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள் மற்றும் லேசான அறிகுறி உள்ள கரோனா நோயாளிகளைத் தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை செய்ய தமிழ்நாடு முழுவதும் 1,643 கோவிட்-19 சிறப்பு மையங்கள் கண்டறியப்பட்டு 1,617 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் 83 ஆயிரத்து 477 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நோய் உள்ளவர்களைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் இதுவரை 5.73 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 12.08 லட்சம் மக்களுக்குக் காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அங்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் அடித்தட்டு மக்களுக்காக இலவசமாக மறுமுறை உபயோகிக்கத் தகுந்த முகக்கவசங்களை வழங்கும் திட்டம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மறுமுறை உபயோகிக்கத் தகுந்த முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் அதிகமாக இருந்த தொற்று எண்ணிக்கை, வீடு வீடாகச் சென்று நோய்த் தொற்று உள்ளதா எனக் கண்டறிதல், கூடுதலாகப் பணியாளர்கள் நியமித்தல், காய்ச்சல் சிறப்பு முகாம்கள் போன்றவற்றால் இன்று நோய் நம்முடைய சென்னை மாநகரத்தில் கட்டுக்குள் வைக்கப்பட்டிருகிறது.
தமிழக மக்கள் நல்வாழ்வையே தன் வாழ்வு முழுவதிலும் நோக்கமாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் வாழ்ந்த ஜெயலலிதா காட்டிய வழியில் வீர நடை போடும் தமிழக அரசு, இம்மருத்துவச் சேவையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில், அரசைத் தேடி மக்கள் என்ற நிலை மாறி மக்களைத் தேடி வரும் நல் அரசு என்ற நிலை இன்றைக்கு உருவாக்கப்பட்டிருகிறது என்பதனையும், அதனை உறுதிப்படுத்தும் விதமாக அனைவருக்கும் நலவாழ்வு என்ற கோட்பாட்டின் கீழ் மாநிலம் முழுவதும் 2,000 முதலமைச்சரின் மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டு தற்போது முதற்கட்டமாக இங்கு திறக்கப்படவுள்ளது.
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் உடனடியாக மருத்துவச் சேவை சென்றடையும் வகையிலும், கரோனா நோய்த் தொற்று குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும், காய்ச்சல் மற்றும் மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளை எளிய முறையில் வழங்கும் நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது.
தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருந்தாளுநர் இந்த மினி கிளினிக்கில் செயல்படுவார். தமிழக மருத்துவச் சேவை வரலாற்றில் இது ஒரு மைல் கல் மட்டும் அல்லாது தமிழக அரசின் சாதனை கிரீடத்தில் ஒரு ரத்தினக் கல்லாக இன்றைக்குப் பிரகாசித்துக் கொண்டிருகிறது.
தற்போது முகக் கவசம் கட்டாயம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் கைகளை முறையாகக் கழுவுதல் போன்றவற்றைப் பின்பற்றினால் மட்டுமே நோய்ப் பரவலை நம்மால் தடுக்க முடியும். எனவே, பொதுமக்கள் தவறாது இவ்வறிவுரைகளைப் பின்பற்றிடுமாறு நான் அவர்களை அன்புடனும் அக்கறையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.
கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைக் காப்பதற்காக தமிழக அரசோடு தோளோடு தோள் நின்று கடமையே உயிர் மூச்சாக அல்லும் பகலும் அர்ப்பணிப்புடன் பணி ஆற்றிய அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, உணவு வழங்கல் துறை, சத்துணவு, குடிசை மாற்று வாரியம், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசுத் துறையினர் ஆகியோரது சேவையைப் பாராட்டுகிறேன்".
இவ்வாறு துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT