Published : 14 Dec 2020 12:21 PM
Last Updated : 14 Dec 2020 12:21 PM

விவசாயிகள் போராட்டத்தைச் சீர்குலைத்தால் விளைவுகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

விவசாயிகள் போராட்டத்தைச் சீர்குலைத்தால், விளைவுகளுக்குத் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முத்தரசன் இன்று (டிச.14) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய அரசு செப்டம்பர் மாதம் நிறைவேற்றியுள்ள மத்திய விவசாயிகள் விரோதச் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவையும் திரும்பப் பெற வலியுறுத்தி, நவம்பர் 26 முதல் தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியான முறையில், ஜனநாயக வழிமுறையில் போராடி வருகிறார்கள்.

19-வது நாளாகத் தொடரும் போராட்டத்தை ஆதரித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் விவசாயிகள் ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியுள்ளது. அமைதியான முறையில் தொடங்கியுள்ள போராட்டத்தை தமிழ்நாடு அரசு, காவல்துறை மூலம் சீர்குலைத்து, சிறுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அமைதி முறை போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையின் தலையீட்டை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இதில், காவல்துறையின் அத்துமீறல் தொடருமானால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழ்நாடு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x