Published : 14 Dec 2020 12:33 PM
Last Updated : 14 Dec 2020 12:33 PM
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் தலைவர்களுக்குப் பிரச்சார வாகனங்கள் கோவையில் தயாராகி வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணி வியூகங்களை வகுத்து வருகின்றன.
மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்தும், தனித்துப் போட்டியிடுவதும் குறித்தும் ஆலோசித்து வருகின்றன. இருபெரும் கட்சிகளும் வாக்காளர்கள் பக்கம் நகரத் தொடங்கியுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கட்சியினர், தங்கள் தலைவர்களுக்காக அதிநவீன பிரச்சார வாகனங்களைத் தயார்படுத்தத் தொடங்கி விட்டனர்.
இதற்காகக் கட்சிகள் கொடுத்த ஆர்டர்களின் பேரில் கோவை, சிவானந்தா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிரச்சார வாகனங்கள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளர் முகமது ரியாஸ், 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:
’’நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக டெம்போ டிராவலர் வாகனங்களை ஆல்ட்ரேஷன் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். முந்தைய தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்திற்காக வாகனங்களைத் தயார் செய்து கொடுப்பதற்கான ஆர்டர்கள் வந்தன. அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாகனங்களைத் தயார் செய்து கொடுத்ததால், மீண்டும் எங்களுக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கின.
இதற்காகப் புதிதாக டெம்போ டிராவலர் வாகனங்களை வாங்கி, அதைப் பதிவு செய்து எங்களிடம் கொண்டுவந்து கொடுப்பார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளை அதில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். முழுமையாகத் தயார்படுத்த 2, 3 மாதங்கள் ஆகும் என்பதால், முன்கூட்டியே கொண்டுவந்து கொடுத்து விடுவார்கள். தமிழகத்தைத் தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வாகனங்கள் கொண்டு வரப்படுகின்றன. கேரளாவில் இருந்து குறைந்த அளவே வாகனங்கள் கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, தலைவர்களின் பிரச்சாரத்திற்கு வாகனங்கள் தற்போது வரத்தொடங்கிவிட்டன. ஹைட்ராலிக் மேடை, தானியங்கி மேடை, சொகுசுப் படுக்கை, இருக்கை, மேஜை, கழிப்பறை, தொலைக்காட்சி, ஆன்டெனா, சேட்டிலைட், ஃபோகஸ் லைட், ஒலிப்பெருக்கி, ஸ்பீக்கர், ஏர் சஸ்பென்சன், இரு பக்கவாட்டில் பாதுகாவலர்கள் பிடித்துக் கொண்டு நிற்பதற்கான ஃபுட்போர்டு, குளிர்சாதன வசதி ஆகியவற்றை அவர்களின் விருப்பத்திற்கேற்பப் பொருத்தித் தருகிறோம். கழிப்பறை வசதி எல்லோரும் கேட்பதில்லை. கேட்பவர்களுக்கு மட்டும் செய்துகொடுக்கிறோம்’’.
இவ்வாறு முகமது ரியாஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT