Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை 5 லட்சம் பேர் எழுதினர்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடக்க உள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்தது. இதில், ஆயுதப்படை 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 3,784 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள்-685, பெண்கள்-3,099 பேர் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 6,545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத் துறையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 119 பேரும், தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இதற்காக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர், கோவை, சிவகங்கை உட்பட பல நகரங்களில் 499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 11 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.10 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் ஹால்டிக்கெட் மற்றும் எழுது பொருட்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர். தேர்வர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
2-ம் நிலை காவலர் பணிக்காக 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 5 லட்சம் பேர் நேற்றைய தேர்வில் கலந்துகொண்டனர். அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மட்டும் 42 மையங்களில் 37,550 பேர் தேர்வு எழுதினர். சென்னையில் 35 தேர்வு மையங்களில் 29,981 பேரும், சேலத்தில் 17 மையங்களில் 24,278 பேரும் தேர்வு எழுதினர். சென்னையில் தேர்வு மையங்களுக்கு காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில், நேற்று நடைபெற்ற எழுத்து தேர்வில் 11,883 பேர் தேர்வு எழுதினர். இதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் 6,133 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5,386 பேர் நேற்று தேர்வுஎழுதியதாக மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் 8 மையங்களில் 11,099 பேர் எழுதினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT