Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM
சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பாலங்களின் அடிப்பகுதிகள் மற்றும் பெரிய தூண்களில் ‘வெர்ட்டிக்கல் கார்டன்’ மற்றும் அதற்கு தேவையான சொட்டுநீர்ப் பாசன கட்டமைப்புகளை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடற்கரை சாலையில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகம், குடிசை மாற்று வாரிய அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, கிண்டி வேளாண் விற்பனைத் துறை போன்ற இடங்களில் தோட்டக்கலைத் துறை சார்பில் ‘வெர்ட்டிக்கல் கார்டன்’ அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தலைமைச் செயலகம், எழிலகம், குறளகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் ‘வெர்ட்டிக்கல் கார்டன்’ அமைக்கலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளோம்.
இந்த தோட்டத்தில் ‘மணி பிளான்ட்’தான் அதிகமாக இடம்பெறும். இச்செடிகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடை ஈர்ப்பதுடன், மனிதனுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும் வெளிப்படுத்தும். மேலும் சுகாதாரமான சூழல் உருவாகும்.
கட்டிடத்தின் வெளிப்பகுதி, நுழைவுப்பகுதி, கட்டிடத்துக்குள் என எல்லாப் பகுதிகளிலும் வெர்ட்டிக்கல் கார்டனை பிளாஸ்டிக், மெட்டல் போன்றவற்றில் அமைக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மேம்பாலங்களில் ‘வெர்ட்டிக்கல் கார்டன்’ அமைக்கப்பட்டு வருகிறது. இதில், மணி பிளான்ட், சிங்கோனியம் ஆகிய செடிகள் வைக்கப்பட உள்ளன. மற்ற செடிகள் காடு மாதிரி வளர்ந்துவிடும். அதனால் இந்த செடிகள்தான் அதிகமாக வளர்க்கப்படும். இவை அலங்காரச் செடிகள்தான். இந்த தோட்டம் அமைக்கப்படும் பகுதிகள் பசுமையாக இருக்கும். காற்று தூய்மைப்படும். தூசிகள் கட்டுப்படுத்தப்படும். குளுமையான சூழல் நிலவுவதுடன், பாதசாரிகளின் கண்ணுக்கு குளுமையாகவும் காட்சியளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மேம்பால பகுதிகளை சுத்தமாக பராமரிக்க பயன்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT