Last Updated : 13 Dec, 2020 06:57 PM

 

Published : 13 Dec 2020 06:57 PM
Last Updated : 13 Dec 2020 06:57 PM

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை தொடக்கம்: ஜன.4-ம் தேதி வரை நடைபெறுகிறது

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் பரமபத வாசலின் அழகிய தோற்றம். | படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை (டிச.14) தொடங்குகிறது.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா டிச.14-ம் தேதி தொடங்கி 2021, ஜன.4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, கடந்த அக்.18-ம் தேதி ஆயிரங்கால் மண்டபம் அருகே கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில் முகூர்த்த கால் நடப்பட்டது.

தொடர்ந்து, நாளை (டிச.14) வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்குகிறது. டிச.14-ம் தேதி திருநெடுந்தாண்டகமும், டிச.15-ம் தேதி முதல் டிச.24-ம் தேதி வரை பகல் பத்து திருவிழாக்களும், டிச.24-ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரமும் (நாச்சியார் திருக்கோலம்) நடைபெறும்.

அலங்கார வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கும் ஆயிரங்கால் மண்டபம்.

முக்கிய விழாவான பரமபத வாசல் திறப்பு டிச.25-ம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் நடைபெறும். அன்று, நம்பெருமாள் ரத்தின அங்கி சாற்றப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் சேவை சாதிப்பார்.

தொடர்ந்து, டிச.31-ம் தேதி நம்பெருமாள் கைத்தலச் சேவையும், ஜன.1-ம் தேதி குதிரை வாகனத்தில் திருமங்கை மன்னன் வேடபரி விழாவும் நடைபெறும். ஜன.1-ம் தேதி பரமபத வாசல் திறப்பு கிடையாது.

தொடர்ந்து, ஜன.3-ம் தேதி தீர்த்தவாரியும், ஜன.4-ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் (டிச.15 முதல் ஜன.4 வரை) மூலவர் முத்தங்கி சேவை, பரமபதவாசல் ஆகியவற்றுக்கு கோயிலின் www.srirangam.org (http://srirangam.org>>e-Seva)என்ற இணையதள முகவரியில் கட்டணமில்லா தரிசனம் மற்றும் விரைவுவழி தரிசனம் (ரூ.250/) ஆகியவற்றுக்கு முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் பக்தர்கள், முன்பதிவு செய்த நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக கோயிலுக்கு வர வேண்டும். பக்தர்கள் கோயிலுக்கு முகக்கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால், காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியைப் பயன்படுத்த வேண்டும்.

ஆயிரங்கால் மண்டபம் மணல் வெளியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பந்தல்.

வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் நம் பெருமாள் புறப்பாடு காலங்களில், அரையர் சேவை மற்றும் வீணை ஏகாந்த நேரங்களிலும், வேடபறி நிகழ்ச்சியின்போதும், நம்மாழ்வார் மோட்சத்தின்போதும் பக்தர்கள் சேவைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகளை srirangam temple என்ற கோயிலின் யூடியூப் சேனலிலும், உள்ளூர் தொலைக்காட்சியிலும் காணலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதான திட்டத்தின் கீழ் உணவுப் பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x