Last Updated : 13 Dec, 2020 06:11 PM

 

Published : 13 Dec 2020 06:11 PM
Last Updated : 13 Dec 2020 06:11 PM

டிசம்பர் 18-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு 

திருவாரூர்

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்வரும் டிசம்பர் 18ஆம் தேதியன்று தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:

"மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி மாநகரைப் பல கோடி விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டிய மத்திய அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சொல்லி அவதூறு பிரச்சாரங்கள் செய்து விவசாயிகளின் போராட்டத்தைப் பிளவுபடுத்த முயல்வது கண்டிக்கத்தக்கது

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விவசாயிகள் போர்வையில் போராட்டக் களத்தில் நக்சலைட்களும், தீவிரவாதிகளும் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள் என்று அப்பட்டமான பொய்யைத் தெரிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனை அவர் திரும்பப் பெற வேண்டும். நியாயமான கோரிக்கையை ஏற்று சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு பிரதமர் உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. போராட்டக் குழு அறைகூவலுக்கு இணங்க தமிழ்நாட்டிலும் சுங்கச் சாவடிகளைத் தடுத்து நிறுத்துவது, ரயில் நிலையங்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என நாங்கள் எச்சரிக்கிறோம்.

எதிர்வரும் டிசம்பர் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு இதனை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்".

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x