Published : 13 Dec 2020 03:54 PM
Last Updated : 13 Dec 2020 03:54 PM
புதுச்சேரி காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்கக் கோரி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் கடிதம் தர அதிமுக முடிவெடுத்துள்ளது.
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
''புதுவை மாநிலத்தின் புயல் மழை சேத நிலவரம் தொடர்பான ஏட்டிக்குப் போட்டியான கணக்குகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
ரூ.400 கோடி சேதம் என்று கூறி வந்த முதல்வர் நாராயணசாமி, மத்திய குழு வந்த பிறகு ரூ.100 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், ஆளுநர் கிரண்பேடியோ, அதிகாரிகள் ஆய்வின்படி ரூ.13 கோடி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
புயல் போன்ற இந்தக் காலகட்டத்தில்கூட தங்களின் உடமைகளை இழந்து அரசின் நிதி உதவிக்காகக் காத்திருக்கக் கூடிய மக்களுக்கும் நிதி உதவியைப் பெற்றுத்தர வேண்டிய முதல்வர் நாராயணசாமி, ஆளுநருடன் இணக்கமாகச் செல்லாததால் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்காத சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்.
நிதி பெற வேண்டும் என்றால் முதல்வர் நாராயணசாமி, தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைத்து சேத நிலவரத்தை ஆய்வு செய்து ஆளுநருக்கு அனுப்பி இருவரும் இணைந்து மத்திய அரசை நிதி கேட்டிருந்தால் கண்டிப்பாக கிடைத்திருக்கும்.
புதுவை காங்கிரஸ் அரசை கடந்த 6 மாதங்களாக கூட்டணிக் கட்சி திமுக குறை கூறி வருகிறது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் பாஜக பொறுப்பாளரைச் சந்தித்து விரைவில் காங்கிரஸில் இருந்து விலகுவேன் என்று கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது.
அதிமுக தலைமைக் கழக அனுமதி பெற்று மாநில அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆளுநர் கிரண்பேடியிடம் ஓரிரு தினங்களில் கடிதம் அனுப்ப உள்ளோம். செயல்படாத முதல்வர் நாராயணசாமி தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்''.
இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT