Published : 13 Dec 2020 04:24 PM
Last Updated : 13 Dec 2020 04:24 PM
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதும் மூட வேண்டும், விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கரோனா முன்களப் பணியாளர்களுக்குப் பாராட்டு
2020 மார்ச் மாதம் கொடிய நோயான கரோனா தாக்கம் ஏற்பட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மைப் பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள், காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் சிறந்த முறையில் பணியாற்றினார்கள். அவர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்
விவசாயிகளுக்கு மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுப் போராட்டத்திற்கு ஒரு குழு அமைத்து விசாரணை செய்து, அதன் மூலம் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
விவசாயிகளுக்கு ரூ. 40,000 நிவாரணம்
சமீபத்தில் ஏற்பட்ட நிவர்-புரெவி புயலின் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மாநிலத்திலும் நெல், கரும்பு, வாழை, போன்ற பயிரிடப்பட்ட விளை நிலங்கள் சேதம் அடைந்தன. மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய், முதல் தவணையாக 15 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும்
பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு மாதங்களில் 44 நாட்களாக எந்த விலை மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. சமீபத்தில் 10 நாட்களில் 10 ரூபாய்க்கு மேலாக விலையேற்றப்பட்டது. கரோனா என்ற கொடிய நோயில் இருந்து 6 மாத காலமாக எந்தவொரு வருமானமும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்
தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு 2016-ல் தேர்தல் வாக்குறுதியாக டாஸ்மாக் கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று கூறியது. ஆனால், கடந்த வாரத்தில் ECR சாலையில் ஒரு பெண் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிவரும்பொழுது காவல்துறை சோதனை செய்தபோது அந்தப் பெண் அரசு அதிகாரி என்றும் பாராமல் தகாத வார்த்தையில் பேசியதை சமூக வலைதளத்தில் அனைவராலும் பார்க்கப்பட்டது. இதன் விளைவு பெண்கள் குடிக்கு அடிமையாகும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
சாலைச் சீரமைப்பு வேண்டும்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச் சாவடியில் வாகனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை வசதிகள் சீராக இருந்தால்தான் வாகனக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். பூந்தமல்லியிலிருந்து காஞ்சிபுரம் வரை சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்ற காரணத்தினால் வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலைமை உள்ளது. எனவே சாலைகளைச் சீரமைத்து வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறு, ஏரி, குளம் தூர்வார வேண்டும்
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அனைத்துப் பகுதிகளிலும் மழை அதிகமாகப் பெய்தது. அணை, ஆறு, ஏரி, குளம் அனைத்திலும் நீர் நிறைந்தது. உபரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. மழை நீரைத் தேக்கி வைப்பதற்குப் புதிதாக அணைகள் கட்டப்பட வேண்டும். அனைத்து ஆறு, ஏரி, குளங்களைத் தூர்வாரி மழை நீரைச் சேமிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
நெடுஞ்சாலை சாலைகள் மீது கவனம் தேவை
தமிழகம் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதும், நேரம் வீணாவதும், விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கின்றன. மத்திய அரசு, மாநில அரசுகள் உடனடியாக இந்த நெடுஞ்சாலைகளில் சாலைகள் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்குப் பாராட்டு
ஆஸ்ரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் 50 ஓவர், டி-20 போட்டிகளில் சிறப்பான முறையில் பந்து வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் சார்பாகவும், தேமுதிகவின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நடராஜன் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறோம்.
இவ்வாறு தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT