Published : 13 Dec 2020 11:49 AM
Last Updated : 13 Dec 2020 11:49 AM

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?-சரிபார்ப்பு சிறப்பு முகாம்: இன்று கடைசி நாள் 

சென்னை

தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். இரண்டு நாள் முகாமில் இன்றே கடைசி நாள். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேர்தல் நெருங்கும் வேளையில் வாக்களிக்கச் செல்பவர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது உங்கள் பெயர் பட்டியலில் இல்லை எனத் தகவல் கேட்டுக் கொந்தளிப்பார்கள், ஏமாற்றத்துடன் திரும்புவார்கள். சிலர் வீடு மாறியிருப்பார்கள். பழைய விலாசத்தில் அவர் இல்லை என்பதால் பெயர் நீக்கப்பட்டிருக்கும். அதைத் தவிர்க்க புதிய விலாசத்துக்குத் தனது வாக்கை அதற்குரிய படிவத்தைப் பூர்த்தி செய்து மாற்ற வேண்டும்.

18 வயது நிரம்பியிருப்போர், அவர் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விடுவதால் அடுத்த தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போகும். சிலரது பெயர், வயது, மற்ற விவரங்கள் தவறாக இருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவதுதான் சிறப்பு முகாம்கள். ஆண்டுதோறும் இரண்டு அல்லது மூன்று முறை இது நடக்கும்.

அப்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பட்டியல், படிவங்கள் இருக்கும். பொதுமக்கள் மேற்சொன்ன காரணங்களைத் தவிர்க்க இம்முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளதால் பொதுமக்கள் கட்டாயம் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா எனச் சரிபார்க்கவும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் ஜன.01/2021ஆம் தேதியினைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2021ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவ.16 அன்று வெளியிடப்பட்டடது. மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தாரின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் ஜன.01/2021 அன்று 18 வயது நிறைவு அடைகின்றவர்கள் (01.01.2003-ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள்) படிவம் 6-ஐப் பூர்த்தி செய்தும் பெயரைச் சேர்க்கலாம்.

பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐப் பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாகப் படிவம் 8-ஐப் பூர்த்தி செய்தும், சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் படிவம் 8-­Aவைப் பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் டிச.15/2020 காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், டிச.13 (இன்று) 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

அம்மையத்தில் பொதுமக்கள் உரிய படிவங்களைப் பெறவும், பூர்த்தி செய்த படிவங்களைச் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் சேர்க்கவும் செய்யலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்காலம்.

ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்துப் பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற ஏதுவாக, வரைவு வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x