Published : 13 Dec 2020 11:13 AM
Last Updated : 13 Dec 2020 11:13 AM
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போதே திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் களைகட்டத் தொடங்கியுள்ளது. பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு மக்களை சந்திக்க தொடங்கி விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழநி, நத்தம், வேடசந்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் நான்கு தொகுதிகளில் திமுகவும், மூன்று தொகுதிகளில் அதிமுகவும் தங்கள் வசம் வைத்துள்ளன.
சட்சபை தேர்தலை அடுத்து நடந்த மக்களவை தேர்தலில் திண்டுக்கல் எம்.பி., தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது.
மொத்தமுள்ள 14 ஒன்றியங்களில் 9 ஒன்றியங்களில் திமுகவும், 5 ஒன்றியங்களை அதிமுகவும் கைப்பற்றின. இந்தநிலையில் நான்கு மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதில் தங்கள் பலத்தை காட்ட அதிமுக, திமுக கட்சிகள் தற்போதே தேர்தல் களத்தில் இறங்கி விட்டன. வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு தான் கட்சி ஊழியர் கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த தேர்தல் வரை இந்த நடைமுறை தான் தொடர்ந்தது. ஆனால் இந்த தேர்தல் அதிமுக, திமுகவின் இருபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் முன்னதாகவே களம் இறங்கி மக்களை சந்தித்து வருகின்றனர் அதிமுக, திமுக கட்சியினர்.
அதிமுக
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தொகுதி களில் முதற்கட்டமாக ஊழியர் கூட்டத்தை நடத்தி முடித்து விட்டனர். இதில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மீண்டும் போட்டியிடுவார் என எதிர் பார்க்கப்படும் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக தனி கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக கட்சி நிர்வாகிகள் கிராமம் கிராமமாக சென்று மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வுகாண முயற்சித்து வருகின்றனர். மேலும் இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும், கிராமங்களில் எந்த விசேஷங்கள் நடந்தாலும் தங்கள் பங்களிப்பை கொடுத்தும் வருகின்றனர். முழுவீச்சில் திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
திமுக
திமுகவினர் தங்கள் பிரச்சார பயணத்தை மக்கள் சந்திப்பு இயக்கமாக தொடங்கிவிட்டனர். ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தனது பிரச்சார பயணத்தை திண்டுக்கல் தொகுதியில் தொடங்கி வர்த்தகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.
தொடர்ந்து கிராமசபை கூட்டம் நடத்தி கிராம மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதேபோல் பழநி தொகுதி, ஒட்டன்சத்திரம் தொகுதி, நத்தம் தொகுதி என வலம் வந்து கொண்டுள்ளார். இவரது தொகுதியான ஆத்தூர் தொகுதியில் கூட்டம் சேர்க்காமல் சில நிர்வாகிகளுடன் மட்டும் சென்று திண்ணைப் பிரச்சாரம் மூலம் மக்களை சந்தித்து பேசி வருகிறார். பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட ஆலோசனைக் கூட்டங்களும் தொகுதிவாரியாக நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இரு கழகங்களும் சட்டசபை தேர்தலுக்கு தற்போதே களம் இறங்கி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் தங்கள் பணியை தொடங்கி விட்டனர்.
கூட்டணி கட்சியினர்
ஆனால் அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னமும் மக்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லை. காரணம் திண்டுக்கல் மாவட்டத்தில் நமக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் தொகுதியில் அதிக கவனம் செலுத்தலாம் என காத்திருக்கின்றனர். திமுக கூட்டணிக் கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி திண்டுக்கல்லில் பல போராட்டங்களை நடத்தி வருகிறது. திண்டுக்கல் தொகுதியை பெற ஒரு முயற்சியாகவே இது கருதப்படுகிறது.
தங்களின் கூட்டணிக் கட்சிகள் அமைதி காக்கும் நிலையில் அதிமுக, திமுக திண்டுக்கல் மாவட்டத்தில் முழுமையாக களம் இறங்கி தேர்தல் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT