Published : 13 Dec 2020 10:34 AM
Last Updated : 13 Dec 2020 10:34 AM
சிதம்பரத்தில் 60 ஆண்டுகளைக் கடந்தும், தொடர்ந்து நல்ல பல பணிகளைச் செய்து வருகிறது காந்தி மன்றம். சிதம்பரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி பிள்ளையின் புதல்வர் குஞ்சிதபாதத்தின் முயற்சியால் 1956ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் சிதம்பரத்தில் காந்தி மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது.
தொடக்கத்தில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த காந்தி மன்றம், 1971-ம் ஆண்டு சிதம்பரம் வாகீச நகரில் கட்டப்பட்ட ஓடு உள்ள கட்டிடத்திற்கு மாறியது. தமிழ்நாடு ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி இதனை திறந்து வைத்தார். குஞ்சிதபாதத்தின் சீரிய முயற்சியால் 2006ம் ஆண்டு காந்தி மன்ற பொன் விழா நடந்தது. அப்போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடையைக் கொண்டு சிதம்பரம் காந்தி மன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டப்பட்டது.
இப்பொன் விழா கட்டிடத்தை பொள்ளாச்சி மகாலிங்கம் முன்னிலையில் புதுச்சேரியின் அப்போதைய முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். பல்வேறு தருணங்களில் காந்தி மன்றத்திற்கு முன்னாள் முதல்வர் பக்தவச்சலம், மனுபென் காந்தி,ஆச்சார்ய துளசி அடிகள், ம.பொ.சி, டாக்டர் மு.அறம், சர்தார் வேதரத்தினம், புதுவை லெப்டினன்ட் கவர்னர் பி.டி. ஜாட்டி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சார்ய கிருபளானி, கி.வா. ஜகந்நாதன், நா. பார்த்தசாரதி, நாரண. துரைக்கண்ணன், குன்றக்குடி அடிகளார் மற்றும் பல அறிஞர் பெருமக்கள் வருகை தந்துள்ளனர்.
காந்தி மன்றத்தில் மாலை நேர வகுப்புகள், வெள்ளி தோறும் சர்வ சமய பிரார்த்தனை, மாதந்தோறும் சிந்தனை மேடை, மருத்துவ முகாம்கள், பள்ளி, கல்லூரிகளில் காந்திய சிந்தனை வகுப்புகள் ஆகிய சமுதாய நலப்பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2016ம் ஆண்டு நடைபெற்ற காந்தி மன்ற வைர விழா நிகழ்ச்சிகளில் மதுரை காந்தி நினைவு நிதி தலைவர் நடராஜன், புதுதில்லி காந்தி அருங்காட்சியக இயக்குநர் அண்ணாமலை, தமிழ்நாடு சர்வோதய மண்டல் செயலாளர் ராஜேந்திரன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட காந்திய அன்பர்கள்,அறிஞர் பெருமக்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
தற்போது, சிதம்பரம் காந்தி மன்றத்தின் பணிகளை தலைவர் ஞானம், செயலாளர் ஜானகிராமன்,பொருளாளர் சிவராமசேது, 30 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் காந்திய அன்பர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தலைவர் ஞானம் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு சென்று காந்திய கோட்பாடுகள் குறித்து உரையாற்றி வருகிறார்.
மன்றத்தின் துணை செயலாளர் முத்துக்குமரன் பள்ளி மாணவர்களிடையே காந்தியடிகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு, காந்திய சிந்தனைகளை பரப்பி வருகிறார். இப்படியாக சிதம்பரம் காந்தி மன்றம் காந்தியின் சிந்தனைகளை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடந்த 64 ஆண்டுகளாக எடுத்துக் கூறி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT