Published : 12 Dec 2020 09:48 PM
Last Updated : 12 Dec 2020 09:48 PM

ரயில்வே பார்க்கிங்குகளை மூடும் மண்டல மேலாளரின் முடிவு: உயர் நீதிமன்றம் தடை  

ரயில்வே வாகன பார்க்கிங் பகுதியை மூடியும், பார்க்கிங் பகுதியைக் காலி செய்யும்படியும் மண்டல மேலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தற்போதுள்ள நிலையே தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில் நிலைய வளாகத்தில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் நிறுத்துமிட (பார்க்கிங்) ஒப்பந்தத்தை ராஜ்குமார் என்பவர் எடுத்திருந்தார். 2017-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி தொடங்கிய ஒப்பந்தக் காலம் இந்த ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதியுடன் முடிந்தது. இதேபோல மந்தைவெளியில் ஜெயபாலன், சைதாப்பேட்டையில் ஜெகதீசன், சிந்தாரிப்பேட்டையில் விஜயலட்சுமி, செனட்ரலில் விஷ்ணு ஆகியோர் ஒப்பந்தம் எடுத்திருந்தனர்.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் பார்க்கிங் ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாகவும், அதனால் இடத்தைக் காலி செய்யும்படியும் அந்த ஒப்பந்ததாரர்களுக்கு தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் அக்டோபர் 19-ம் தேதி தனித்தனியாக உத்தரவிட்டார். மேலும், ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டதால் வாகனம் நிறுத்தக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒப்பந்ததாரர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தபோது, பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் காணாமல் போனாலோ, சேதம் அடைந்தாலோ ஒப்பந்ததாரர்கள்தான் முழுப் பொறுப்பு என்றும், வருவாய் இல்லாமல் ஊழியர்களை நியமித்துப் பாதுகாத்து வருவதாகவும், ஊரடங்கு காலத்தில் வாகனங்களை நிறுத்த யாரும் வராததால் ஒப்பந்ததாரர்களுக்கு வருவாய் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பிறப்பித்த உத்தரவில், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யக் கோரி மனுதாரர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை தெற்கு ரயில்வே வர்த்தக மண்டல மூத்த மேலாளர் 4 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், ரயில்வே வாகன பார்க்கிங் பகுதியை மூடியும், பார்க்கிங் பகுதியைக் காலி செய்யும்படியும் மண்டல மேலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, தற்போதுள்ள நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x