Published : 12 Dec 2020 08:55 PM
Last Updated : 12 Dec 2020 08:55 PM
மதுரை மடீட்சியா அரங்கில் பிரதமரின் மக்கள்ந ல சேவை திட்ட பிரச்சார அமைப்பு சார்பில், பிரதமர் மோடி அரசின் நலத் திட்டங்களை விளக்கும் பிரச்சார இயக்கக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அந்த அமைப்பின் தேசியத் தலைவரும், பிரதமர் மோடியின் இளைய சகோதரருமான பிரகலாத் மோடி பங்கேற்றார். அவருடன், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்
செல்லூர் கே.ராஜூ தலைமையில் அவரது கட்சியினர் பங்கேற்று ஆலோசனை செய்தனர். பின்னர், பிரதமரின் மக்கள் நல சேவை திட்ட பிரச்சார அமைப்பின் தேசியத் தலைவர் பிரகலாத் மோடி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழகத்தின் ஹீரோ ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பிரதமர் மோடி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய பாஜக அரசு 160-க்கும் மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
இது குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே வந்துள்ளேன். ஏழை மக்களுக்காகவே பிரதமர் மோடி உழைத்து வருகிறார். இன்னும் அவரது திட்டங்கள் ஏழை மக்களிடம் போய்ச் சேரவில்லை.
சுமார் 70 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட கட்சிகள் இந்தத் திட்டங்களை மக்களிடம் போய் சேரவிடாமல் தடை போடுகிறார்கள். இத்திட்டங்களிலிருந்து மக்களைத் தூரமாக வைக்கவே முயற்சி செய்கின்றனர்.
இந்தத் தடைகளையும் மீறி அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதே எங்களது தலையாயப் பணி. இந்த சேவையில் 22 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுப்பியுள்ளோம். இந்தியாவில் 135 கோடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 22 லட்சம் சேவையாளர்கள் போதவில்லை எனில் அதை 22 கோடியாக மாற்றவும் தயாராக உள்ளோம். விவசாயிகளின் தோளில் துப்பாக்கியை வைத்து யாரும் காரியத்தை நடத்த வேண்டாம்.
அனைத்து விவசாயிகளுக்கும் மோடி 100 சதவீதம் நன்மை செய்து வருகிறார். விவசாயிகளுக்கான திட்டங்களைப் படிப்படியாக நிறைவேற்றித் தருவார். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, தமிழக மாநில தலைவர் ராஜாராமன், மதுரை மாவட்ட தலைவர் பாஸ்கரன், தேசிய நிர்வாகிகள் கோஷ்மகராஜ், ஜெயகணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக சேலத்திலிருந்து கார் மூலம் மதுரை வந்த பிரகலாத் மோடிக்கு, பாத்திமா கல்லூரி முன்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT