Published : 12 Dec 2020 06:22 PM
Last Updated : 12 Dec 2020 06:22 PM

70% கட்டுமானப்பணிகள் மட்டுமே நிறைவு; தள்ளிப்போகும் மதுரை பெரியார் பேருந்து நிலைய திறப்பு விழா- போக்குவரத்தால் ஸ்தம்பிக்கும் சிம்மக்கல், கோரிப்பாளையம்

மதுரை

70 சதவீதம் பணிகள் மட்டுமே தற்போது வரை நிறைவடைந்துள்ளதால் வரும் பொங்கல் பண்டிக்கைக்கு திறப்பதாக இருந்த ரூ.150 கோடியில் அமைக்கப்படும் பெரியார் பேருந்து நிலையம் திறப்பு விழா மீண்டும் தள்ளிப்போகிறது.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் ரூ.160 கோடியில் பிரமாண்டமாகக் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையம், பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலையமானது மதுரையின் பராம்பரியமாகவும், அடையாளமாக கடந்த காலத்தில் கருதப்பட்டது. ஆனால், போதிய இடவசதி இல்லாமல் அதன் பழமையான கட்டிடங்களில் விரிசல் விட்டதால் தற்பாதைய போக்குவரத்திற்கும், பயணிகள் வருகைக்கும் தகுந்தாற்போல் புது பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.

கடந்த மே மாதமே செயல்பாட்டிற்கு வருவதற்கு மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா ஊரடங்கால் வடமாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றதால் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி தடைபட்டது.

தற்போது உள்ளூர் பணியாளர்களைக் கொண்டு மந்தமாக பேருந்து நிலையம் கட்டுமானப்பணி நடக்கிறது. வரும் பொங்கல் பண்டிகையின்போது புதிய பேருந்து நிலையத்தைத் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், தற்போதும் பணிகள் 70 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளன. அதனால், பொங்கல் பண்டிகை அன்று திறப்பது சாத்திமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பணிகள் தீவிரமாக நடக்கின்றன. ஆனால், திறப்பு விழா குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்றார்.

திறப்பு விழா தள்ளிப்போவதால் வெயில், மழைக்காலத்தில் பயணிகள், பெரியார் பேருந்து நிலையத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிரம்பி இருப்பதால் பயணிகள் சாலைகளில் நின்று பஸ் ஏற முடியவில்லை.

வெயில் காலத்தில் சாலையில் உள்ள புழுதி பறப்பதால் பயணிகள் பேருந்துக்காக சாலைகளில் காத்திருக்க முடியவில்லை.

மாற்றுத்திறனாளிகள், பெரியவர்கள், பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக சாலைகளில் காத்திருப்பது சவாலாக உள்ளது. அதனால், கூடுதல் பணம் கொடுத்து ஆட்டோ அல்லது கார்களில் செல்ல வேண்டிய உள்ளது.

வசதியில்லாதவர்கள், மழையிலும், வெயிலிலும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் இயல்பாகவே நாள் முழுவதும் நெரிசல் காணப்படும். தற்போது பேருந்து நிலையம் வேறு இல்லாததால் வாகன ஓட்டிகள் இப்பகுதியை கடந்து செல்லவது பெரும் போராட்டமாக உள்ளது.

வாகன நெரிசலால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால், மக்கள் பெரியார் பஸ்நிலையம் வழியாக வருவதைத் தவிர்த்து மாற்றுப்பாதை வழியாக ஆரப்பாளையம், சிம்மக்கல் செல்கின்றனர்.

ஏற்கெனவே, நெரிசலுடன் காணப்படும் புது ஜெயில் ரோடு, பை-பாஸ் ரோடு, பழங்காநத்தம் ரோடு போன்றவற்றில் இன்னும் நெரிசல் அதிகரித்துள்ளது.

உள்ளூர் அமைச்சகர்கள் பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்துத் திறக்க ஏற்பாடு செய்ய முயற்சி செய்யவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கோரிப்பாளையம் மேம்பாலம் மட்டுமில்லாது, யானைக்கல் பாலத்தில் இருந்து சிம்மக்கல் வழியாக பெரியார் பேருந்து நிலையத்திற்கு கட்டுவதாக அறிவித்த பறக்கும் பாலமும் வெறும் அறிவிப்பாக மட்டுமே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதனால், பெரியார் பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கும் நெரிசல், கோரிப்பாளையம், தல்லாகுளம் வரை நீடிக்கிறது. அதனால், அரசு மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம் மற்றும் மற்ற அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு காலை, மாலை நேரங்களில் 'பீக்' அவரில் விரைவாக சாலைகளைக் கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள், பணியாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

அதனால், பெரியார் பேருந்து நிலையத்தை விரைவாக திறப்தோடு மட்டுமில்லாது, கோரிப்பாளையம் பாலம், சிம்மக்கல் வழியாக பெரியார் பஸ்நிலையத்திற்கு பறக்கும் பாலம் திட்டத்தையும் மிக விரைவாகத் தொடங்குவதற்கு உள்ளூர் அமைச்சர்கள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x