Published : 12 Dec 2020 04:16 PM
Last Updated : 12 Dec 2020 04:16 PM
பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் பேரிடர் நிதியாகக் கேட்கப்பட்ட 1.14 லட்சம் கோடி ரூபாயில், வெறும் 6 ஆயிரத்து 187 கோடிதான் கிடைத்திருக்கிறது. மாநிலத்தைப் பாதிக்கும் வகையில், அவர்கள் என்ன செய்தாலும், முதல்வரும், அமைச்சர்களும் தங்களின் ஊழல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே மத்திய பாஜக அரசின் நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
“நவம்பர் இறுதி வாரத்தில் “நிவர்” புயல் மற்றும் கனமழையால், காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி - காவிரி டெல்டா விவசாயிகளின் வேளாண் பயிர்கள் கணக்கிட முடியாத அளவிற்கு சேதப்பட்டுள்ளன. மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து 74 கோடி ரூபாயை விடுவித்து உத்தரவிட்ட அதிமுக அரசு, அதை யாருக்குக் கொடுத்தது? என்ன செலவு செய்தது? என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை.
நான்கு நாள் பயணமாக, மத்தியக் குழு வந்து பார்வையிட்டுத் திரும்பிய பிறகும், 3,758 கோடி ரூபாய் மத்திய அரசிடம் நிதியுதவி கேட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் - பாதிப்பு ஏற்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் இன்றுவரை அடித்தட்டு மக்களுக்கு உரிய உருப்படியான நிவாரணம் எதுவும் போய்ச் சேரவில்லை. கடுமையான இழப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கும் எந்த நிவாரண நிதியுதவியும் கிடைக்கவில்லை.
இடைக்கால நிவாரணமாக நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்குக என்று கோரிக்கை விட்டும், முதல்வர் ஏனோ “வராத திட்டங்களுக்கு” அடிக்கல் நாட்டு விழாக்களிலும், அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்தி அரசியல் ரீதியாக விளம்பரப்படுத்திக் கொள்வதிலும் மட்டுமே கவனமாகவும் கருத்தாகவும் இருந்து வருகிறாரே தவிர - இடைக்கால நிவாரண உதவியை வழங்கிட முன்வரவில்லை.
ஏழைகளுக்கு இலைச் சோறு பரிமாறி, அதைப் படம் எடுத்து விளம்பரப் படுத்திக் கொண்டால், நிவாரணம் கிடைத்து விட்டதாக நினைத்துக் கொள்வார்களா? தங்கள் வேளாண் பயிர்களை எல்லாம் இழந்து வேதனையில் மூழ்கியிருக்கும் விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீடு மற்றும் பேரிடர் நிதி ஆகியவற்றிலிருந்து இதுவரை எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை. மூழ்கிய பயிரைப் பிடுங்கி முகர்ந்து பார்த்தால், முழு நிவாரணமும் வந்து சேர்ந்து விட்டதாக நிம்மதி கொள்வார்களா?
கடந்த காலங்களில் ஏக்கருக்கு வெறும் 15 ஆயிரத்தைக் கொடுத்துக் கைகழுவி விட்டதுபோல், இந்த முறையும் விவசாயிகளுக்கு, கண்துடைப்பிற்காக - அதுவும் தேர்தல் வருவதால், ஒரு சொற்ப நிதியைக் கொடுத்து, கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் விவசாயிகளை நட்டாற்றில் விட்டுவிட அரசு முடிவு செய்திருப்பதாக எனக்கு வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பேரிடர்களுக்கான நிதிகளிலெல்லாம் ஊழல் மட்டுமே முதன்மையாக நிற்கிறதே தவிர - சொந்தக் கட்சிக்காரர்கள் மட்டுமே பலமாகக் கண்டுகொள்ளப்பட்டதாகச் செய்திகள் பதிவாகி இருக்கின்றனவே தவிர - விவசாயிகளின் கவலைகளை - உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளைத் துடைக்கும் விதத்தில் எவ்வித நிதியுதவியும் இடம் பெறுவதில்லை. இந்த நிவர் புயல் துயரத்திலும், அதே நிலைமை நீடிக்கவும் - பேரிடர் நிதியிலும் ஊழல் செய்வதற்கும் நிச்சயம் அனுமதிக்க முடியாது.
பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் பேரிடர் நிதியாகக் கேட்கப்பட்ட 1.14 லட்சம் கோடி ரூபாயில், வெறும் 6 ஆயிரத்து 187 கோடிதான் கிடைத்திருக்கிறது. வலியச் சென்று கூட்டணியாகவே மத்திய பாஜக அரசுடன் இருந்தாலும் - மாநிலத்தைப் பாதிக்கும் வகையில், அவர்கள் என்ன செய்தாலும், முதல்வரும், அமைச்சர்களும், தங்களின் ஊழல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே மத்திய பாஜக அரசின் நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கோ, மக்களுக்கோ உரிய நிதியைப் பெற்றுத்தர அந்தக் கூட்டணி உறவைப் பயன்படுத்துவதில்லை என்பது, “யானைப் பசிக்கு சோளப்பொறி” போல் ஒதுக்கியுள்ள மத்திய அரசின் மிகச் சொற்பமான நிதியிலிருந்து தெரிகிறது. ஆகவே, மிக மோசமான சேதங்கள் ஏற்பட்டு, விவசாயிகள் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஏதோ 3,758 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே பாதிப்பு எனக் குறைத்து மத்திய அரசிடம் நிதியுதவி கோரியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.
உண்மையான சேத விவரங்களைக் கூறி மத்திய அரசிடம் அதிக நிதி கேட்க வேண்டும் என்றும்; அதற்குத் திமுக நாடாளுமன்ற - மாநிலங்களவை உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் தர அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றத் தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு வழங்கும் நிவாரண உதவி விவசாயிகளுக்குக் கொஞ்சமாவது ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்திட வேண்டும். ஆகவே, பயிர்க் காப்பீடு மற்றும் பேரிடர் நிதி இரண்டையும் சேர்த்துப் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த நிவாரணத் தொகையைக் காலம் தாழ்த்தாமல், உடனடியாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
விவசாயிகள் அழுத கண்ணீர் வீண் போகாது, அது பேரரசையும் வீழ்த்திவிடும் என்பதை முதல்வர் பழனிசாமி நினைவில் கொள்ள வேண்டும். எனவே, தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளின் மனதில் சூழ்ந்திருக்கும் சினத்திலிருந்து சிறிதளவேனும் தப்பிக்க வேண்டுமானால், உடனே ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி என அறிவித்திட வேண்டும். செய்வாரா பழனிசாமி அல்லது எப்போதும் போல, பொய்களைச் சொல்லியே இனியும் பொழுது போக்குவாரா?”
இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT