Published : 12 Dec 2020 03:33 PM
Last Updated : 12 Dec 2020 03:33 PM

வேலூர் மாவட்ட சோதனைச்சாவடிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் ரூ.1.32 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தையொட்டி அமைந்துள்ள கிறிஸ்டியான்பேட்டையில் செயல்படும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக சோதனைச்சாவடி.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத லஞ்சப் பணம் ரூ.1.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் கேரளா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநில எல்லையில் செயல்படும் மோட்டார் வாகன ஆய்வாளர் சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் இன்று (டிச. 12) அதிகாலை ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தையொட்டி அமைந்துள்ள கிறிஸ்டியான்பேட்டை மற்றும் சேர்க்காடு சோதனைச் சாவடிகளில் துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் ரஜினி, விஜய், விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய இரண்டு குழுவினர் தனித்தனியாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராம் கண்ணன் ஆய்வுப் பணியில் இருந்தார். அவரது மேஜையை ஆய்வு செய்தபோது ரூபாய் நோட்டுகள் ஏராளமாக இருந்தன.

மொத்தமாக, எண்ணிப் பார்த்ததில் ரூ.96 ஆயிரம் இருந்தது. அதேபோல், சேர்க்காட்டில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெய மேகலா என்பவரின் மேஜையை சோதனையிட்டதில் கணக்கில் வராத பணம் ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் தொடங்கிய சோதனை காலை 9 மணி வரை நீடித்தது.

மேற்கண்ட இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மொத்தமாக ரூ.1.32 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம் கண்ணன், ஜெய மேகலா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்டை மாநிலங்களில் இருந்து முறையாக வரி செலுத்தாமல் தமிழகம் வரும் வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள், கூடுதல் பயணிகளை ஏற்றி வரும் ஆம்னி பேருந்துகள், கார்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் இவர்கள் லஞ்சப் பணம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x