Published : 12 Dec 2020 01:56 PM
Last Updated : 12 Dec 2020 01:56 PM

தமிழகம் முழுவதும் இன்று லோக் அதாலத்: நிலுவையில் உள்ள 80 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு

சென்னை

தமிழகம் முழுவதும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) இன்று முதல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்கும் வகையில் ஆண்டுதோறும் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) வழக்கு நடத்தப்படும். ஆண்டுதோறும் மார்ச், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் லோக் அதாலத் நடத்தப்படும். அதன்படி இன்று மக்கள் நீதிமன்றங்களை நடத்த தேசிய லோக் அதாலத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று தமிழகத்தில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய லோக் அதாலத்தில் (மக்கள் நீதிமன்றம்) நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்பான காசோலை பிரச்சினை தொடர்பான வழக்குகள், தொழிலாளர்கள் தகராறு வழக்குகள், மின்சாரம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 115 வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

இதேபோல, நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யத்தக்க காசோலை பிரச்சினை சம்பந்தமான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 79 ஆயிரத்து 962 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

இந்த வழக்குகளில் தீர்வு காண, சென்னை உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தவிர தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 354 அமர்வுகள் அமைக்கப்பட்டு, வழக்குகளில் தீர்வு காண உள்ளதாக தமிழ்நாடு மாநிலச் சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலரும் மாவட்ட நீதிபதியுமான கே.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைகளில் இன்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x