Published : 12 Dec 2020 01:32 PM
Last Updated : 12 Dec 2020 01:32 PM
முதல்வர் பழனிசாமி தலைகீழாக நின்று முயன்றாலும், பாஜக - அதிமுக இணைந்து செய்யும் துரோகத்தை விவசாயிகள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என, திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, டி.ஆர்.பாலு இன்று (டிச.12) வெளியிட்ட அறிக்கை:
"மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்கள் திமுகவின் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவைதான் என்று, தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறோம் என்பதையே படித்துப் பார்க்காமலும், படித்தாலும் புரிந்து கொள்ளாமலும், பகிரங்கமாகவே அபாண்டமாகப் பொய் பேசியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர், திமுக தேர்தல் அறிக்கையைச் சரியாகப் படிக்கவில்லை. தமிழ் செய்தித்தாள் ஒன்றும் அதனைப் படிக்காமல் திமுகவை விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. திமுகவுக்கு விவசாயிகள் மத்தியில் பெருகி வரும் ஆதரவைப் பார்த்து, ஏற்பட்ட ஆதங்கம் கண்ணை மறைத்திருக்கிறது!
திமுகவின் 2016 தேர்தல் அறிக்கையில் 'வேளாண்மை' என்ற தலைப்பில் மட்டும் அளித்த 54 தேர்தல் வாக்குறுதிகளில், மிக முக்கியமான 'வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை', 'நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்' என்ற வாக்குறுதிகள் எல்லாம் முதல்வரின் கண்ணுக்குத் தெரியவில்லை.
ஏன், 'சிறு - குறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்' என்ற மிக முக்கியமான வாக்குறுதியை உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும் உச்ச நீதிமன்றம் வரை சென்று விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்ற பழனிசாமி படித்துக் கூடப் பார்க்கவில்லை.
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய பாஜக அரசின் மின் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் பழனிசாமி, 'தமிழகத்தில் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்' என்ற திமுக வாக்குறுதியைப் பார்க்கவில்லை.
திமுக அரசு உருவாக்கிய உழவர் சந்தைகளை முடக்கி, விவசாயிகளுக்கு நேரடியாக விலை கிடைப்பதை நாசம் செய்தது அதிமுக அரசு. அதனால், 'உழவர் சந்தைகள் உயிரூட்டப்பட்டு மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்' என்றும், 'நடமாடும் சந்தைகள் அமைக்கப்படும்' என்றும், திமுக அளித்த வாக்குறுதிகள் அவருக்கு விளங்கவேயில்லை!
திமுக தேர்தல் அறிக்கையில் 'வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும்' என்று அறிவித்த வாக்குறுதி கார்ப்பரேட்டுகளும் விவசாயிகளும் 'ஒப்பந்த விவசாயம்' செய்து கொள்வதற்காக அல்ல!
அந்த அடிப்படை கூடத் தெரியாமல் ஒரு முதல்வர் பேசியிருப்பது, யாரோ சிலரின் 'எடுப்பார் கைப்பிள்ளையாக' எப்படி எடப்பாடி பழனிசாமி மாறி விட்டார் என்பதைக் காட்டுகிறது.
ஒழுங்காக திமுக தேர்தல் அறிக்கையை அவர் படித்திருந்தால், தனது துரோகத்தை மறைக்க, திமுக தேர்தல் அறிக்கையின் ஆதரவைத் தேடியிருக்க மாட்டார். ஏனென்றால், அவர் ஆதரிக்கும் 'ஒப்பந்த விவசாயம்' பற்றிய வார்த்தையே திமுக தேர்தல் அறிக்கையில் இல்லை.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை மேலும் வலுப்படுத்துவதற்கே புதிய கொள்கை வகுக்கப்படும் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது.
'இந்தக் கொள்கையைக் கால மாறுதலுக்கு ஏற்ப மேம்படுத்தவும், புதுப்பிக்கவும் ஏற்ற வகையில் வேளாண் விளைபொருள் விற்பனை (ஒழுங்குமுறைச்) சட்டம் கொண்டு வரப்படும்' என்று, மிகத் தெளிவாக எவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் கூறியிருக்கிறோம். அது வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும், உழவர் சந்தைகள் மற்றும் நடமாடும் சந்தைகளையும் உருவாக்கி, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமல்ல, அதற்கும் மேலும் அதிக விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் தேர்தல் வாக்குறுதி!
திமுக தேர்தல் அறிக்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளைத் தேடிப் பிடித்து, ஒரு பித்தலாட்டப் பேட்டியை முதல்வர் பழனிசாமி கொடுத்திருக்கிறார்.
குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கப்படும், இலவச மின்சாரம் தொடரும், உழவர் சந்தை விரிவுபடுத்தப்படும், நடமாடும் சந்தைகள் அமைக்கப்படும் என்ற 2016-ல் அளித்த திமுகவின் அந்த வாக்குறுதிகள், இன்று கூட பழனிசாமியைப் பயமுறுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வேளாண் சட்டங்களை ஆதரித்த துரோகத்தை திமுக தேர்தல் அறிக்கையைக் காட்டியாவது தப்பித்துக் கொள்ளலாமா என்ற தவியாய்த் தவிக்கிறார்.
விவசாயிகளுக்கு அடுக்கடுக்காகச் செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேட, விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களுக்கு, தான் வாக்களித்ததை மறைக்க, திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லாதவற்றை முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்வது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; கீழ்த்தரமான அருவருக்கத்தக்க பிரச்சாரம்!
என்னதான் முதல்வர் தலைகீழாக நின்று முயன்றாலும், பாஜக - அதிமுக இணைந்து செய்யும் துரோகத்தை விவசாயிகள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
அதிமுக ஆதரித்த மூன்று வேளாண் சட்டங்களிலும் விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் அடிமைப்படுத்தும் 'ஒப்பந்த விவசாயம்' (Contract farming) திணிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையும் (MSP) மறுக்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய பாஜக அரசும் அதிமுக அரசும் துடிக்கிறது.
இந்த மாதிரி விவசாய விரோதச் செயல்பாடுகள், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கனவிலும் எதிர்பார்க்க முடியாதவை. 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் சரி, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, விவசாயிகளுக்கு ஆதரவாக, கடன் தள்ளுபடிக்கு ஆதரவாக, குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஆதரவாக வாக்குறுதிகளை வழங்கிய ஒரே தேர்தல் அறிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கை என்பதை முதல்வர் பழனிசாமிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது ஊழல் முறைகேடுகள் குறித்தும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றின் சட்ட நடவடிக்கைகளில் இருந்தும் தப்பிக்க, மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்து, இன்றைக்குத் தமிழகம் மட்டுமின்றி நாடே கொந்தளித்துப் போராட அடிப்படைக் காரணமாக இருந்துவிட்டு, இப்போதும் இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நீட்டி முழக்கிப் பேசி வரும் ஒரே முதல்வர் இந்தியாவிலேயே பழனிசாமி ஒருவர்தான்!
அதற்குத் தக்க தண்டனையை, தேர்தல் நேரத்தில் தங்களின் வாக்குரிமையின் மூலம் தமிழக விவசாயிகள் நிச்சயம் கொடுப்பார்கள்; அதிலிருந்து அதிமுக தப்ப முடியாது. இச்சட்டங்களைக் கொண்டு வந்த பாஜகவையும் விவசாயிகள் மறந்துவிட மாட்டார்கள்!".
இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT