Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM
கர்நாடகாவில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க 30 கிமீ தூரத்துக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.45 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. இங்கு 115 காப்புக்காடுகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட யானைகள் நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றன. இவை தவிர, கர்நாடக மாநிலத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு யானைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள தளி வனப்பகுதியில்தேவர்பெட்டா எனும் கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில், கர்நாடகாவில் இருந்து வரும் யானைகள் நுழைகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலம் கோலார் வனப்பகுதி வழியாக, ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதிக்கு செல்கின்றன.
இந்த யானைகளால் மனிதர்கள் தாக்கப்படுவதும், மனிதர்களால் யானைகள் கொல்லப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை உடல்நலக்குறைவு, வயது முதிர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 11 யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இறந்துள்ளன. யானை தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ‘‘இம்மாவட்டத்தில் 42 ஆயிரத்து 137 ஹெக்டேர் பரப்பளவில் ராகி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை குறி வைத்து ஒவ்வொரு ஆண்டும் யானைகள் கூட்டமாக வருகின்றன. யானைகள் விளை நிலங்களுக்கு வருவதை தடுக்க கிரானைட் கற்கள் கொண்டு தடுப்பு, சோலார் வேலி, அகழிகள், ஆகியவற்றை வனத்துறையினர் அமைத்தும் யானைகள் இடம் பெயர்வதை தடுக்க முடியவில்லை. வனத்தில் இருந்து வெளியேறும் யானைகளை மின்சாரம் வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் சிலர் கொல்கின்றனர். இதனைத் தடுக்க வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும்,’’ என்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் பிரபு கூறியதாவது:
தீபாவளிக்குப் பிறகு ராகி அறுவடை காலத்தில், கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து 150 யானைகள் வழக்கமாக தமிழக வனப்பகுதிக்கு வருகின்றன. இதனைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜவளகிரி, தளி பகுதியில் 30 கிமீ தூரத்திற்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு ஒரு மாதம் கழித்து யானைகள் வந்தன. தடுப்பு வேலியை மீறி வந்த 30 யானைகள், ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. கர்நாடகாவில் இருந்து வந்த மேலும் 30 யானைகள் சானமாவு, ஊடேதுர்க்கம் பகுதியில் சுற்றித் திரிகின்றன. ஜவளகிரியில் 30 யானைகளும், நொகனூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் 10 யானைகள் சுற்றி வருகின்றன. யானைகளின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். இந்த யானைகள் சில நேரங்களில் விளை நிலங்களை சேதப்படுத்தி விடுகின்றன.
யானைகள் நடமாட்டம் குறித்து தினமும் கிராமப்புறங்களில் தண்டோரா மூலம் அறிவித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறோம். விளைநிலங்களுக்கு வரும் யானைகளை விரட்ட கிராம மக்களுக்கு பட்டாசுகள் வழங்கி வருகிறோம். பயிர் சேதம், மனித உயிர் சேதங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT