Published : 11 Dec 2020 09:23 PM
Last Updated : 11 Dec 2020 09:23 PM
சென்னையில் சிபிஐ பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான நிலையில், யார் குற்றவாளி என்பதைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு சட்ட விரோதமாகத் தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக சிபிஐக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, 400.47 கிலோ தங்கத்தைக் கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக, சுரானா நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கர்களின் 72 சாவிகளும், 400.47 கிலோ பறிமுதல் செய்ததாகத் தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், சுரானா நிறுவனம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேண்டர்டு சார்ட்டர்டு வங்கி ஆகிய வங்கிகளிடம் பெற்ற ஆயிரத்து 160 கோடி ரூபாயை ஈடுகட்ட ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைச் சிறப்பு அதிகாரிக்கு வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்தபோது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தைக் காணவில்லை. இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக் கோரி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கு நடந்துள்ளதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ கிராம் தங்கம் மாயமாகி இருப்பது என்பது சிபிஐ மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து, எஸ்.பி. அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரியைக் கொண்டு விசாரித்து ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.
தங்கம் எடை குறையும் உலோகம் அல்ல என்றும், இது சிபிஐக்கு ஒரு அக்னி பரீட்சை போன்றது என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ள நீதிபதி, இந்த மோசடியில் யார் குற்றவாளி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளதால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT