Published : 21 Oct 2015 11:38 AM
Last Updated : 21 Oct 2015 11:38 AM
ஆந்திரா வனப்பகுதியில் அம்மாநில அரசு கட்டிய தடுப்பணைகளால், தமிழக எல்லையோர பகுதியில் உள்ள விளை நிலங்கள் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது. தென்பெண்ணை ஆறு மூலம் மாற்றுத் திட்டம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் குப்பம் வனப்பகுதியில் இருந்து மழைக் காலங்களில் வரும் மழை நீர், தமிழக எல்லையான காளிக் கோயில் வழியாக ஓதிகுப்பம் ஏரிக்கு வரும். சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் இருந்து சிந்தகம்பள்ளி, காரகுப்பம், பர்கூர், மத்தூர் வழியாக பெனு கொண்டபுரம் ஏரிக்கு செல்லும்.
இந்த ஏரி நிரம்பிய பின் உபரி நீர் கால்வாய் மூலம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு செல்லும். ஓதிகுப்பம் ஏரியில் இருந்து பாம்பாறு அணை வரை உள்ள தூரம் 40 கிலோ மீட்டர்.
இந்த தண்ணீர் மூலம் பர்கூர், மத்தூர் மற்றும் ஊத்தங்கரை ஒன்றியத்தில் மட்டும் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாசனம் பெறும். விவசாயம் மட்டுமின்றி குடிநீர் தட்டுபாடும் இல்லாமல் இருந்தது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் கடந்த 15 ஆண்டுகள் முன்பு வரை நடந்தது.
ஆனால், குப்பம் வனப்பகுதியில் ஆந்திரா அரசு தடுப்பணைகளைக் கட்டி தண்ணீர் வரத்தை முற்றிலும் தடுத்ததால் தமிழக பகுதிகள் வறண்டுவிட்டன. தடுப்பணைகளால் ஓதிகுப்பம் ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றது.
மேலும் ஓதிகுப்பம் ஏரியில் இருந்து பாம்பாறு அணைக்குத் தண்ணீர் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, நகர, கிராமப் பகுதியில் இருந்து கழிவுகள் கொட்டப்பட்டதாலும், கிரானைட் குவாரிகளால் ஆக்கிரமிப்பு, போதிய மழையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது தண்ணீர்வரத்து முற்றிலும் முடங்கி கழிவு நீர் கால்வாயாகக் காட்சியளிக்கிறது.
நீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை அமைத்தனர். அதுவும் சில ஆண்டுகளில் வற்றியது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக தென்பெண்ணையாற்று திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி விவசாயத்தையும், தங்களது வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து படேதலாவ் கால்வாய் திட்ட விவசாயப் பயனாளிகள் குழு ஒருங்கிணைப்பாளர் விஜயக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஆந்திரா வனப்பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணைகளால் 3 ஒன்றியத்துக்கு உட்பட்ட விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இதனை போக்கும் வகையில் மார்கண்டேய நதியில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் படேதலாவ் ஏரி திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டமும் கர்நாடகா - ஆந்திரா மாநிலத்தில் கட்டப்பட்ட தடுப்பணைகளால் முடங்கியது.
தற்போது தென்பெண்ணை ஆறு செல்லும் எண்ணேகொல்புதூரில் இருந்து படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும். இதன் மூலம் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பர்கூர் ஒன்றியங்களில் உள்ள 28 ஊராட்சிகளில் 1,09,344 விவசாயிகள், 40,225 ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும். 95 ஏரிகளுக்கு நீர் வரத்து பெருகும்.
அதனைத் தொடர்ந்து காட்டாகரம் ஏரியில் இருந்து பெணுகொண்டாபுரம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஏரியின் உபரி நீர் பாம்பாறு அணைக்கு செல்லும். இதேபோல் படேதலாவ் ஏரியில் இருந்து ஓதிகுப்பம் ஏரிக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுசெல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பாம்பாறு அணை நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜன் கூறும்போது, ’வறண்டு போன நிலங்களை காக்க, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நெடுங்கல் அணையில் இருந்து பெணுகொண்டாபுரம் வழியாக பாம்பாறு அணைக்கு பாதாள கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டுசெல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பாம்பாறு அணை விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT