Published : 11 Dec 2020 07:25 PM
Last Updated : 11 Dec 2020 07:25 PM
குமரி கண்டம் தொடர்பாக கடல் அகழாய்வு மேற்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பது தொடர்பாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அதலை கிராமத்தைச் சேர்ந்த கே.புஷ்பாவனம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கர்நாடகம், உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவது போல் கூடுதல் நிதி ஒதுக்கவும், மத்திய தொல்லியல் துறையின் சென்னை, திருச்சி வட்டங்கள் மற்றும் துணை வட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மத்திய தொல்லியல்துறை சார்பில் மகாபலிபுரத்தில் 2003 முதல் 2004 வரை அலோக் திருபாதி கடலுக்கடியில் அகழ்வாய்வு மேற்கொண்டார். இந்த அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை ஆய்வு முடிவு வெளியிடப்பட்டதாக என்பது தெரியவில்லை. மகாபலிபுரம் கடல் அகழாய்வு முடிவு வெளியிடப்பட்டதா? இல்லையா?, இல்லை என்றால் எப்போது முடிவு வெளியிடப்படும் என்பதை உதவி சொலிசிட்டர் ஜெனரல் மத்திய அரசிடம் கேட்டு நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
அலோக்திரிபாதிக்கு பிறக கடல் அகழாய்வு செயலிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மீண்டும் கடல் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இது தொடர்பாகவும் உதவி சொலிசிட்டர் ஜெனரல் மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க வேண்டும்.
தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவனாந்தம், பூம்புகாரில் 1968ல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த ஆய்வில் பூம்புகார் 9-ம் நூற்றாண்டை சேர்ந்ததும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். அந்த அறிக்கையை அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரரானர் பல்கலைக்கழகத்தில் கடல் அறவியல் துறை மற்றும் கடல் புவி தொழில்நுட்பவியல் தறைகள் உள்ளன. இந்த துறைகளில் குமரி கண்டம் தொடர்பாக கடல் அகழாய்வு மேற்கொள்ள கட்டமைப்பு வசதிகள் உள்ளதாக என்பதை பல்கலைக்கழக வழக்கறிஞர் முகமதுஆதிப் அடுத்த விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும்.
குமரி கண்டம் தொடர்பாக முதல் கட்ட கடல் அகழாய்வு மேற்கொள்ள ஒரிசா பாலு மற்றும் காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தின் பூம்புகார் திட்ட ஆலோசகராக பணிபுரிந்து வரும் எஸ்.எம்.ராமசாமி முன்வந்துள்ளனர்.
எனவே, குமரி கண்டம் தொடர்பான முதல் கட்ட அகழாய்வு பணிக்கு இவர்களை நெல்லை மனோன்மணியம் சுந்தரரானர் பல்கலைக்கழகமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை டிச. 18-ல் நடைபெறும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT