Published : 11 Dec 2020 06:22 PM
Last Updated : 11 Dec 2020 06:22 PM
மழையில் நனைந்து நெல் முளைத்ததால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்குத் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (டிச.11) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர்மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான மூட்டைகளில் நெல் முளைத்துவிட்டது. காவிரிப் பாசன மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலிலேயே முளைக்கத் தொடங்கிவிட்டன. விவசாயிகளுக்கு நடப்பாண்டு லாபம் தரும் ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டை அடுத்தடுத்து தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயல்கள் கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி வரை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தப் புயலால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்களில் முதன்மையானவர்கள் விவசாயிகள்தான்.
காவிரிப் பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் வளாகங்களில் விற்பனைக்காகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தொடர்மழையில் நனைந்து வீணாகிவிட்டன.
தொடர்மழை ஓய்ந்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களாக நெல் மூட்டைகள் முளைக்கத் தொடங்கியிருக்கின்றன. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 30 ஆயிரத்திற்கும் கூடுதலான மூட்டைகளில் நெல் முளைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
காவிரிப் பாசன மாவட்டங்களைக் கடந்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே நிலையே காணப்படுகிறது. இந்த மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளை, கொள்முதல் காலம் நவம்பர் 23-ம் தேதியே முடிவடைந்துவிட்டதால் வாங்க முடியாது எனக் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து, தனியார் வணிகர்களிடம் விற்கும் எண்ணத்துடன் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முளைத்துவிட்டன.
நெற்பயிர்களும், நெல் மூட்டைகளும் மழை - வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்த உண்மை என்றாலும் கூட, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அரசுதான் அவற்றைக் களைந்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்.
காவிரிப் பாசன மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கும் போதிலும், பல்வேறு சிக்கல்கள் காரணமாக காப்பீடு செய்யாத பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? எனத் தெரியவில்லை. பயிர்க் காப்பீடு செய்ய முடியாதது விவசாயிகளின் தவறு இல்லை.
அதேபோல், முளைத்துப் போன நெல் மூட்டைகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதற்கு முன்னுதாரணம் எதுவும் உள்ளதா? என்பது தெரியவில்லை. ஆனால், மழை - வெள்ளத்தால் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துவிட்டதும், அதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டதும் உண்மை. அதை மட்டும் அடிப்படையாக வைத்து அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு ஆராய வேண்டும்.
முளைவிட்ட நெல் மூட்டைகளில் பாதிக்கப்படாமல் உள்ள நெல்லைப் பிரித்தெடுத்து, அவற்றை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்; முளைவிட்டு சேதமடைந்த நெல்லைக் கணக்கிட்டு அதற்கு இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.
அதேபோல், காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் விவசாயிகளின் துயரத்தைத் துடைக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்படாமல் நெல்லை இருப்பு வைக்கும் நிலை ஏற்பட்டால், திடீர் மழை காரணமாக நெல் மூட்டைகள் பாதிக்கப்படாமல் தடுக்க அவை தார்பாலின்கள் கொண்டு மூடப்பட வேண்டும்; நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ள பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட வேண்டும்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT