Published : 11 Dec 2020 02:50 PM
Last Updated : 11 Dec 2020 02:50 PM
சனிப்பெயர்ச்சி விழாவின்போது திருநள்ளாறு நளன் குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதியில்லை என்று காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருநள்ளாற்றில், சனி பகவானுக்குத் தனி சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிச.27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார்.
சனிப்பெயர்ச்சி விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இது தொடர்பாகக் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
’’டிச.19,20, 26, 27, ஜன.2, 3, 9, 10, 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் வரக்கூடிய பக்தர்கள் தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்திருப்பது கட்டாயம். இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் உட்பட அனைத்து பக்தர்களும் தனித்தனியாக https://thirunallarutemple.org/sanipayarchi என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
செல்லுபடியாகும் இ-டிக்கெட் மற்றும் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் மற்றும் பிற தீர்த்தங்களில் குளிக்கவோ, புனித நீராடவோ அல்லது மதச் சடங்குகள் நடத்தவோ அனுமதி இல்லை.
நகரின் உள்ளே வரும் அனைத்து பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் எப்போதும் முகக்கவசத்தைச் சரியாக அணியவும், தங்கள் கைகளை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்தவும், 6 அடி தூர இடைவெளியினைப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தரிசனத்தின்போது சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது. கோயிலுக்குள் நுழையும் அனைவரும் உடல் வெப்பநிலைச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நுழைவு வாயில்களில் கோவிட்-19 சோதனை செய்யப்படும்.
கோவிட்-19 அறிகுறி உள்ளோர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். யாத்ரீகர்களில் யாராவது காய்ச்சல், இருமல் போன்ற கரோனா அறிகுறிகள் இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் அனைத்து நுழைவு வாயில்களிலும் அல்லது கோயிலுக்குள் இருக்கும் தன்னார்வலர்களையோ, மருத்துவ அதிகாரிகளையோ உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.
அண்மையில், கரோனா தொற்றுக்கு ஆளாகி அல்லது காய்ச்சல், இருமல், சுவாச அறிகுறிகள், வாசனை இழப்பு, சோர்வு போன்ற அறிகுறிகள் உள்ள எவரும் யாத்திரையைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், உடல்நலக் குறைவு உள்ளவர்களும் யாத்திரையைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வரக்கூடிய அனைவரும், காரைக்கால் மாவட்டப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தும் அனைத்து ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT