Published : 11 Dec 2020 02:00 PM
Last Updated : 11 Dec 2020 02:00 PM
நாடெங்கும் விவசாயிகளின் குரல் ஓங்கி ஒலிக்கும் வகையில், அனைத்துத் தேர்தல்களிலும் விவசாயிகளுக்கெனத் தனியாகத் தொகுதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திருச்சியில் விவசாய சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் நடத்திய ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
"டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மொழிவாரி மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், இந்தி - சமஸ்கிருத மொழிகளில் மத்திய அரசு கடிதங்கள் அனுப்புவது, உத்தரவுகள் வெளியிடுவது, பொதிகைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்வது ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது. சுற்றுச்சூழல் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிடத் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து அழைப்பு விடுத்திருந்தன.
இதன்படி, இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்குச் செல்லும் புதிய சாலையில் தமிழக விவசாயிகள் சங்கம், சமூக நீதிப் பேரவை, காவிரி உரிமை மீட்புக் குழு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் உரிமைக் கூட்டணி, மக்கள் உரிமை மீட்பு இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், அமைப்பு சாராத் தொழிலாளர் சங்கம், தமிழ்ப் புலிகள் கட்சி, ரெட் பிளாக் கட்சி, நகர் நல ஆர்வலர்கள் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.
அங்கிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு ஜங்ஷன் ரவுண்டானா வழியாகப் பேரணியாக ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர். பேரணியாகச் சென்றவர்களை ஆர்பிஎப் நிலையம் எதிரே போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீஸாரை மீறிக்கொண்டு ரயில் நிலையத்துக்கு முன்னேற முயன்றதால், கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், போராட்டத்துக்குத் தலைமை வகித்த தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னதுரை, போலீஸாரால் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து போலீஸாரைக் கண்டித்தும், மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானம் செய்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட 150க்கும் அதிகமானோரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT