Published : 30 May 2014 09:59 AM
Last Updated : 30 May 2014 09:59 AM
காவல் துறையினரும், அவர்களது குடும்பத்தினரும் தடையில்லாமல் பேசிக்கொள்ள இலவசமாக சிம் கார்டு வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதற்கான நிதியை ஒதுக்கிய பின்னரும் சிம் கார்டு வழங்குவது காலதாமதமாகி வருகிறது.
தமிழக காவல் துறையில் 1.20 லட்சம் பேர் உள்ளனர். இதில் உதவி ஆய்வாளர் முதல் கண்காணிப்பாளர் வரை உள்ளவர்களுக்கு 2008-ம் ஆண்டில் 12,181 பி.எஸ்.என்.எல். சியூஜி சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மாதக் கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. இதற்காக ரூ.2.05 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த சியூஜி சிம் கார்டு திட்டத்தை அரசு விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி சாதாரண முதல் நிலை காவலர் பதவியில் இருந்து காவல் துறை இயக்குநர் வரையிலும், காவல் அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் இலவச சியூஜி சிம் கார்டுகள் வழங்கப்படவுள்ளன.
சியூஜி சிம் கார்டுகள் வைத்திருப் பவர்கள் தங்களுக்குள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இலவச மாக பேசிக் கொள்ளலாம். இதில் நாளொன்றுக்கு 50 இலவச எஸ்.எம்.எஸ்.களும் அனுப்பிக் கொள் ளலாம். காவலர்கள் ஓய்வு பெறும் வரை இந்த சிம் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒவ்வொரு காவலரும் தங்கள் குடும்பத்தினரின் தேவைக்காக 7 சியூஜி சிம் கார்டுகளை சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும் ஒவ்வொரு சிம் கார்டுக்கும் ஆண்டு கட்டணமாக ரூ.264 மட்டும் செலுத்தினால் போதும். ஏற்கெனவே இலவச சிம் கார்டுகள் வைத்திருப்பவர்களும் இந்த சியூஜி திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். போஸ்ட் பெய்ட் சிம் கார்டு வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு சில செலவுகளுக்காக மாதம் ரூ.1,200 அரசு கொடுக்கிறது. அவர்கள் மட்டும் மாத வாடகை தொகையை அரசு கொடுக்கும் தொகையில் இருந்து செலுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், உளவுப் பிரிவு காவலர் களின் வயர்லெஸ் தொலைபேசி சேவைக்காக 1,819 சிம் கார்டுகள் வழங்கப்படவுள்ளன. வயர்லெஸ் தொலைபேசி சேவை சிம் கார்டு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.18.2 லட்சமும், 1.20 லட்சம் காவலர்களுக்கு வழங்கப்படும் சிம் கார்டுகள் தலா ஒன்று ரூ.274 வீதம் ரூ.3.28 கோடியும் செலவாகிறது. இவை அனைத்துக் கும் சேர்த்து ரூ.3.47 கோடி அரசு ஒதுக்கியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதமே இதற்கான நிதியை அரசு ஒதுக்கிவிட்டது. 6 மாதங்கள் கடந்த பின்னரும் காவல் துறையினரின் கைகளில் இதுவரை சிம் கார்டுகள் கொடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், "பி.எஸ்.என்.எல் அதிகாரிகள்தான் தாமதம் செய்கின்றனர். நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறுகின்றனர்.
வாக்கி டாக்கி பறிக்கப்படுமா?
காவல் துறையினர் சிலருக்கு வாக்கி டாக்கி கொடுப்பதில் செலவுகளும், சில நடைமுறை சிக்கல்களும் உள்ளன. இதனால் வாக்கி டாக்கி செலவு களை குறைக்கவும், அனைத்து காவலர்களையும் கண்காணிக் கவும் சிம் கார்டுகள் கொடுக்கப் படுவதாக காவல் துறையை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். ‘சிம் கார்டு லொக்கேஷன் பைன்டர்' சாப்ட்வேர் மூலம் காவலர்கள் பணியில் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப் பதாகவும் கூறப்படுகிறது. வாக்கி டாக்கி வைத்திருக்கும் காவலர்களிடம் இருந்து அதை வாங்கிக்கொண்டு செல்போன் கொடுக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "காவலர்களின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே சிம் கார்டுகள் கொடுக்கப்படுகிறது. அனைவருக்கும் சிம் கார்டுகள் கொடுப்பதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. காவலர்களை கண்காணிப்பதற்காக சிம் கார்டு கொடுக்கப்படவில்லை" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT