Published : 10 Dec 2020 10:13 PM
Last Updated : 10 Dec 2020 10:13 PM
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியன் வேளாண் சட்டங்களால் என்ன பாதிப்பு எனக் கேட்கும் முதல்வருக்கு வழங்க, வேளாண் சட்டங்கள் குறித்து திமுக தொகுத்த 11 அம்சங்களை வெளியிட்டார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
“இரண்டு நாட்களாக தொலைக்காட்சிகளில், ‘வேளாண் சட்டங்களால் என்ன பாதிப்பு? என்று முதல்வர் திரும்பத் திரும்பக் கேட்கிறார். அதற்கு எங்களுடைய பதில், நாங்கள், பல விவசாய சங்க நிர்வாகிகளோடு கலந்துரையாடி அவர்கள் அளித்த 11 காரணங்களை அறிக்கையாகத் தங்களிடம் அளித்துள்ளேன். முதல்வர் இதுகுறித்துக் கேட்கும்போது, இதைக் கொடுங்கள்” என்று அறிக்கை நகல்களை செய்தியாளர்களிடம் அளித்தார்.
திமுக வெளியிட்ட 11 அம்சங்கள்
1 ) குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு விலகிக் கொள்கிறது. இதனால் தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படும்,
2) வருமானத்தை இரட்டிப்பாக்கப் போகிறோம் என்கிற பெயரில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப் பன்னாட்டு பெரு நிறுவனங்களில் நிதிகளை இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. அப்படி அனுமதிக்கப்பட்டால் ஒப்பந்த சாகுபடி முறை என்கிற பெயரில் விவசாய விளை நிலங்கள் அபகரிக்கப்படும். மேலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நிலக்கரி, விளைநிலங்களில் குழாய் பதிப்பு, விரைவுச் சாலைகள் போன்ற பேரழிவுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இது வழிவகுக்கும்.
3) நீர்நிலைகளைப் பாசன மேம்பாடு என்கிற பெயரில் அணைகள் ஆறுகளில் நீர் ஆதாரங்கள் பராமரிப்பு தனியார் பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படும். அதன் மூலம் நிலத்தடி நீர் உட்பட அனைத்தும் வணிக நோக்கில் சந்தைப்படுத்தப்படும் பேராபத்து ஏற்படும்.
4) இந்தச் சட்டம் சந்தையில் போட்டி போட்டு விற்பனை செய்வதற்கு வாய்ப்பாக ஆன்லைன் டிரேட் என்று சொல்லப்படுகிற யூக பேர வணிகம் அனுமதிக்கப்படுவதால் உள்நாட்டு வணிகர்கள் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள்.
5) உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் விவசாய உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் எந்த நாட்டுடனும் இந்திய விவசாய உற்பத்திப் பொருட்கள் போட்டி போட்டு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு முற்றிலும் மறுக்கப்படும். அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும்.
6) தமிழ்நாட்டில் உழவர் சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்துச் சந்தைகளும் கார்ப்பரேட்டுகள் அபகரிக்க வழிவகுக்கும்.
7) இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள மரபணு மாற்று விதைகள் சாகுபடி செய்ய வழிவகுக்கும். இதனால் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களே நஞ்சாகி மருந்தில்லா உயிர்க்கொல்லி நோய்த் தாக்குதலுக்கு மனிதர்கள் ஆளாவார்கள். மண்வளம் மலட்டுத் தன்மை அடையும். இதன் மூலம் ஒட்டுமொத்த விவசாயமும் கேள்விக்குறியாகும்.
8) கூட்டுறவு அமைப்புகள் முடக்கப்பட்டு பெருமுதலாளிகள் கிராமங்கள்தோறும் குறைந்த முதலீட்டில் வங்கிகள் திறந்து கந்துவட்டிக் கொடுமைக்கு விவசாயிகளை அடிமைப்படுத்துவார்கள்.
9) குளிர்சாதனக் கிடங்குகள் உட்பட அனைத்துக் கிடங்குகளும் கார்ப்பரேட்டுகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர். அவ்வாறு கட்டப்படும் மற்றும் தற்போது செயல்பாட்டில் உள்ள கிடங்குகள் முற்றிலும் பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.
10) மிகை உற்பத்தி காலத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திப் பொருட்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கிடங்குகளில் இருப்பு வைத்துக் கொள்வார்கள். தட்டுப்பாடு காலத்தில் நம் இடத்திலேயே பல மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்வதற்கு வழிவகுக்கிறது.
இதற்கு உதவியாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்களை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. இதன் மூலம் வர்த்தக சூதாடிகள் உணவுப் பொருட்களைச் சந்தையில் பதுக்கிவைத்து விற்றுக் கொள்ளை லாபம் அடிப்பதற்குச் சட்டப்படி அனுமதி வழங்கப்படுகிறது.
11) மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இதுவரையிலும் வேளாண்துறை செயல்பட்டு வருகிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது முதல் மாநில அரசினுடைய அதிகாரம் முற்றிலும் பறிக்கப்படுகிறது.
இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT