Published : 10 Dec 2020 09:17 PM
Last Updated : 10 Dec 2020 09:17 PM
தொகுதி மாறிப்போட்டியிட்டாலும் சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்று அவர்களை மதுரை தொகுதி மக்கள் வெற்றிப்பெற வைக்கின்றனர்.
தொகுதி மறுசீரமைப்பிற்கு முன் வரை மதுரை வடக்கு தொகுதி என்ற ஒரு தொகுதியே மதுரை மாவட்டத்தில் இல்லாமல் இருந்தது. 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்தான் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது.
அதற்கு முன் வரை இந்தத் தொகுதியின் பெரும்பாலான பகுதி மதுரை மேற்கு தொகுதியில் இணைந்து இருந்தது. மீதியுள்ள பகுதிகள் தெற்கு, சமயநல்லூர் தொகுதிகளில் இருந்தது.
இந்த தொகுதியில் வார்டுகள் 2 முதல் 8 வரையும், 11 முதல் 15 வரையும் மற்றும் 17 முதல் 20 வரையும் உள்ள பகுதிகள் உள்ளன. ரிசர்வ் லைன், தல்லாக்குளம், டிஆர்ஓ காலனி, செல்லூர், பீபீ.குளம், மேலமடை, கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணாநகர், கோமதிபுரம், மேலமடை, உள்ளிட்ட முக்கிய நகரப் பகுதிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களும், மதுரையின் அடையாளமான உலக தமிழ்ச்சங்கம், காந்திமியூசியம், அரசு சட்டக்கல்லூரி, மாவட்ட நீதிமன்றம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இத்தொகுதியில் உள்ளன.
இந்தத் தொகுதியில் அரசு ஊழியர்கள், பணகக்காரர்கள், நடுத்தர மக்கள் அதிகம் உள்ளனர். மிகக் குறைவாகவே அடித்தட்டு மக்கள் வசிக்கின்றனர்.
புதிதாக உருவாக்கப்பட்டப் பிறகு 2011-ம் ஆண்டு முதல் முறையாக நடந்த இந்தத் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் போட்டியிட்டார். இவருக்கும், இந்தத் தொகுதிக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை. இவர் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர். ஆனால், தொகுதி மாறி இங்கு வந்து போட்டியிட்டார். ஆனாலும், 46,400 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.எஸ்.ராஜேந்திரனை தோற்கடித்தார்.
வேட்பாளர் தொகுதி மாறிப் போட்டியிட்டும் அதிமுக இந்த புதிய தொகுதியில் வெற்றிக் கணக்கை தொடங்கியது.
அதன்பிறகு 2016ம் ஆண்டு இரண்டாது சட்டமன்ற தேர்தலை சந்தித்து இந்த தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் இந்த தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத அதே திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.
இவர் வேட்பாளராகி வெற்றிப்பெற்ற கதை மிகவும் சுவாரசியமானது. ஆரம்பத்தில் இந்தத் தேர்தலில் வேட்பாளராக தற்போதைய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ்.பாண்டியன் அறிவிக்கப்பட்டார். அவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தொடங்கினார்.
ஆனால், சில நாட்களிலே திடீரென்று இவர் மாற்றப்பட்டு ராஜன் செல்லப்பா வேட்பாளராக்கப்பட்டார். பிரச்சாரத்திற்கும், தேர்தலுக்கும் மிகக் குறுகிய காலமே இருந்ததாலும், தொகுதி மாறி போட்டியிட்டாலும் ராஜன் செல்லப்பா வெற்றிப் பெறுவது கடினம் என ஆரம்பத்தில் கூறப்பட்டது.
ஆனால், திமுகவினரிடையே ஒத்துழைப்பு இல்லாததால் காங்கிரஸ் வேட்பாளரால் தன்னை நிலைநிறுத்த முடியவில்லை.
கார்த்திகேயன், அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாக்கரசரின் தீவிர ஆதரவாளர். அவர் மூலமே ‘சீட்’ பெற்று இந்தத் தொகுதியில் போட்டியிட்டார். திருநாவுக்கரசரும் பிரச்சாரத்திற்கு நேரடியாக இந்தத் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தார்.
ஆனாலும், காங்கிரசை இந்தத் தொகுதியில் கரையேற்ற முடியவில்லை.
அதேபோல், தேமுதிக சார்பில் போட்டியிட்ட எஸ்.முஜிபூர் ரகுமான் 17,732 வாக்குகள் பெற்றார். இவரது வாக்குகள் பிரிப்பும் அதிமுக வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது.
இறுதியில், ராஜன் செல்லப்பா 18,839 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
இப்படியாக புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மதுரை வடக்குத் தொகுதியில் இதுவரை நடந்த 2011, 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவே வெற்றிப் பெற்றதுள்ளது.
இவ்வளவுக்கும், இந்தத் தொகுதியில் படித்தவர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் வசதிப்படைத்தவர்கள் அதிகமாக உள்ளனர். அப்படியிருந்தும் அதிமுக இந்தத் தொகுதியில் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருவதால் அவர்கள் இந்தத் தொகுதியை இந்தமுறையும் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுக்காமல் போட்டியிடத் தயாராகி வருகி்னறனர்.
இந்த முறை, தற்போது எம்எல்ஏவாக உள்ள ராஜன் செல்லப்பா, மீண்டும் இங்கு போட்டியிடவில்லை. அவர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு செல்கிறார்.
அதனால், மீண்டும் எம்எஸ்.பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கம் உள்ளிட்டோர் ‘சீட்’ கேட்டு வருகின்றனர்.
திமுக சார்பில் முன்னாள் உணவு மற்றும் செய்தித் துறை அமைச்சராக இருந்த பொன் முத்துராமலிங்கம் போட்டியிட தயராகி வருகிறார். இவர் ஏற்கெனவே மதுரை மேற்குத் தொகுதியில் எம்ஜிஆரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT