Published : 10 Dec 2020 04:29 PM
Last Updated : 10 Dec 2020 04:29 PM
வானவில் மையம் நடத்தும் கலை, பண்பாட்டுத் திருவிழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு பாஜக அரசு அழைப்பு விடுத்திருப்பது அவருக்கும் பாஜகவுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டுகிறது என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று (டிச.10) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசும்போது, "கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தால் வேளாண் தொழில் சார்ந்துள்ள பிற தொழில்கள் பாதிக்கப்படும். விளைபொருட்களை வாங்கி கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைக்கவே இந்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வேளாண் சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டுவந்து குரல் வாக்கெடுப்பு மூலம் குறுக்கு வழியில் அமல்படுத்தியுள்ளனர்.
வேளாண் சட்டங்களால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனத் தமிழக முதல்வர் கூறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. கனடா பிரதமர், ஆஸ்திரேலிய அமைச்சர், லண்டன் எம்.பி.க்கள் என உலக நாடுகளே டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் தன்னை விவசாயி என்று கூறிக்கொண்டு பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவது வேதனைக்குரியது.
நடித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மனு ஸ்மிருதி பற்றி என்ன தெரியும்? அம்பேத்கர், பெரியாரைப் பற்றி படித்தவர்களுக்கு மட்டுமே அதுபற்றித் தெரியும். சங்பரிவாரின் ஏவலாளியாகவும், கார்ப்பரேட்டுகளின் எடுபிடியாகவும் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்துக்களின் முதல் எதிரியே பாஜகதான். பாஜக இந்து விரோதக் கட்சி என்பதை இந்துக்கள் உணர வேண்டும். வெள்ளைக்காரன் வந்த பிறகுதான் பெண்கள் படிக்கவும், வெளியில் வரவும் வழிவகை செய்யப்பட்டது. என் மீது இல்லாத, பொல்லாத கதைகளைச் சொல்லி பழிபோடப் பார்த்தார்கள். கடைசியில் அவர்களே முகத்தில் கரியைப் பூசிக் கொண்டார்கள்" என்றார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன் கூறும்போது, "விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
ஆனால், மத்திய அரசு தனது பிடிவாதத்தில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை. வரும் 16ஆம் தேதி ஜெய்ப்பூர், புதுடெல்லி சாலைகளை மறித்து புதுடெல்லிக்கு வருவதைத் தடுப்போம் என்று போராட்டக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். பாஜக அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது.
வானவில் மையம் நடத்தும் கலை, பண்பாட்டுத் திருவிழாவுக்கு ரஜினிகாந்துக்கு பாஜக அரசு அழைப்பு விடுத்திருப்பது அவருக்கும் பாஜகவுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டுகிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT