Last Updated : 11 Oct, 2015 09:56 AM

 

Published : 11 Oct 2015 09:56 AM
Last Updated : 11 Oct 2015 09:56 AM

வருங்கால வைப்புநிதி தகவலை அறிய புதிய ‘செயலி’ அறிமுகம்: செல்போன் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்

வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) கணக்கு குறித்த தகவல்களை சந்தாதாரர்கள் தங்களது செல்போன் மூலமாகவே எளிதில் அறிந்துகொள்ள புதிதாக செயலி (‘app’) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பல்வகை சட்டம் - 1952, தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995, தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம் 1976 ஆகியவற்றின் கீழ் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுதல், கல்வி, திருமணம், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு முன்பணம், ஓய்வூதியம், காப்பீடு ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்காக ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே தொகைக்கு இணையாக நிர்வாக தரப்பிலும் செலுத்தப்படுகிறது.

வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) கணக்கு குறித்த தகவல்களை உறுப்பினர் கள் தற்போது இணையதளம் மூலம் அறிகின்றனர். இத்தகவல்களை செல்போன் மூலம் எளிதாக அறிந்துகொள்ள வசதியாக ‘செயலி’ (App) ஒன்றை வருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தாம்பரத்தில் உள்ள பி.எஃப். அலுவலக மண்டல முதன்மை ஆணையர் மூ.மதியழகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் அனைத்து துறைகள் குறித்த தகவல்களும் மின்னணு சாதனங்கள் மூலம் பொது மக்களுக்கு எளிதாக கிடைப்பதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பி.எஃப். கணக்கு விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ள தற்போது புதிதாக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், தொழிலாளர்கள் தங்கள் ‘யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர்’ (யுஏஎன்) எண்ணை செயல்பாட்டுக்கு (ஆக்டிவேட்) கொண்டுவரலாம். தங்களது பி.எஃப். கணக்கில் உள்ள இருப்புத்தொகை குறித்து அறியலாம். பாஸ் புத்தகத்தை பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளவும் முடியும்.

நிலுவைத் தொகை

இதேபோல, நிர்வாகத் தரப்பு தங்களது பி.எஃப். நிலுவைத் தொகை குறித்த விவரங்களையும், ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியம் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். www.epfindia.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று http://search.epfoservices.org:81/EPFOMobileApp/mobileApp_en.php என்ற இணைப்பின் மூலம் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன் மூலம், சந்தாதாரர்கள் தங்களது பி.எஃப். கணக்கு குறித்த தகவல்களை எளிதாக அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு மதியழகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x