Published : 10 Dec 2020 11:04 AM
Last Updated : 10 Dec 2020 11:04 AM
திமுகவின் ஓட்டு வங்கிக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, பாரிமுனையில் இன்று (டிச. 10) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆணையம் என்ன ஆனது?
உண்மை நிலையை நாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எண்ணம். அதிமுகவினரின் எண்ணமும் அதுதான். அதனால்தான், தமிழக அரசு ஒரு ஆணையம் அமைத்தது. விசாரணை ஆணையம் பலருக்கும் சம்மன் அனுப்பி அவர்களை அழைத்து விசாரணை நடத்தி, அதனை பதிவு செய்து வருகிறது. இடையில் இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடை நீங்கும்போது மீண்டும் விசாரணை தொடங்கும். விசாரணையின் முடிவில் ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை நிலை நாட்டு மக்களுக்குத் தெரியவரும்.
திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தால் அது ரஜினி, சீமான் போன்றவர்களுக்கு சாதகமாகிவிடாதா?
திமுகவின் மீதான 2ஜி வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ளது. வெகு விரைவில் இந்த வழக்கின் தீர்ப்பு வரவிருக்கிறது. திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது ஊழல், நில அபகரிப்பு, அராஜகம், அத்துமீறல் உள்ளிட்டவற்றில் சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்போது எங்கள் அமைச்சர்கள் மீது எங்கு விசாரணை நடைபெறுகிறது? முதல்வர் மீது விசாரணை நடைபெறுகிறதா? வழக்கு உள்ளதா? எங்கள் அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறதா? யார் மீதும் வழக்கு இல்லையே. பொத்தம்பொதுவாக சொல்வது நிச்சயமாக எடுபடாது. கண்டிப்பாக திமுகவின் ஓட்டு வங்கிக்குத்தான் கடுமையான பாதிப்பு ஏற்படும்.
சூரப்பா விவகாரத்தில், ஆளுநர் முதல்வருக்குக் கடிதம் எழுதியதாகவும், அவரை அழைத்து நேரில் விவாதித்ததாகவும் கூறப்படுகிறதே?
முதல்வர் வெளிமாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு இன்றைக்குதான் சென்னை வந்திருக்கிறார். தற்போது ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். பிறகு எப்படி ஆளுநரும் முதல்வரும் சந்தித்திருக்க முடியும்? அனுமானத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் கேள்விகள். அதற்கு விளக்கமளிக்க முடியாது. இதில் உண்மையில்லை.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT