Published : 10 Dec 2020 03:16 AM
Last Updated : 10 Dec 2020 03:16 AM
விலை வீழ்ச்சி மற்றும் தொடர் மழையால் ஏற்பட்ட கரும்புள்ளி நோய் ஆகியவற்றால் தருமபுரி மாவட்ட பப்பாளி விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பெரும்பாலை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லூர், மொரப்பூர், கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுக்க சுமார் 250 ஏக்கரில் பப்பாளி சாகுபடி நடந்து வருகிறது. ஏற்ற, இறக்கமான விலை கிடைத்தபோதும் குறைந்த அளவு தண்ணீரே பப்பாளிக்கு தேவை என்பது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் சிலர் தொடர்ந்து பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அண்மைக் காலமாக பப்பாளிக்கான விலை 50 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளதாலும், கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையால் பப்பாளிக் காய்களில் புள்ளிகள் ஏற்பட்டு காய்கள் அழுகிப்போவதாலும் பப்பாளி பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.
இதுதொடர்பாக, தருமபுரி அடுத்த வெள்ளோலை அருகிலுள்ள பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விவசாயி லட்சுமி கூறியது:
எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலத்தில் பப்பாளியை பயிரிட்டுள்ளோம். பல ரகங்கள் இருந்தபோதும், ‘ரெட் லேடி’ ரக பப்பாளியையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். எனவே, ரெட் லேடி ரகத்தை அதிக அளவிலும் இதர ரகங்களை குறைந்த அளவிலும் சாகுபடி செய்துள்ளோம். பப்பாளி விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைவது கள்ளிப் பூச்சி என்று அழைக்கப்படும் மாவுப் பூச்சி தாக்குதல் தான். வேளாண்மைத் துறை வழிகாட்டுதல்களை பின்பற்றி கடும் உழைப்பைக் கொடுத்து மாவுப் பூச்சியை கட்டுப்படுத்தி தரமான பப்பாளியை விளைவித்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.
சமீப நாட்களாக பப்பாளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ பப்பாளியை அதிகபட்சமாக ரூ.30 வரை விற்பனை செய்துள்ளோம். தற்போது, கிலோவுக்கு ரூ.10 மட்டுமே விலை கிடைக்கிறது. இதற்கிடையில், சில வாரங்களாக புயல் காரணமாக பெய்த அடைமழையால் பப்பாளியின் செங்காய்களில் கரும்புள்ளிகள் படர்ந்து வருகின்றன. அந்தக் காய்கள் பழுக்கும் நிலையை அடையும்போது கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பழம் அழுகி விடுகிறது. பழங்களின் சுவையும் மாற்றமடைந்து விடுகிறது. இந்த காரணங்களால் பப்பாளி விவசாயிகள் கடும் நஷ்டத்திலும், வேதனையிலும் தவித்து வருகிறோம்.
எனவே, பப்பாளி விவசாயத்தில் உள்ள நோய் தாக்குதல், மழைக்காலங்களில் காய்களில் கரும்புள்ளிகள் விழுந்து பழங்கள் அழுகுதல் ஆகிய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். வேளாண் சார்ந்த துறைகள் ஆய்வுகள் மூலம் இதற்கான தீர்வை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்கிடையில், நடப்பு ஆண்டில் விலை வீழ்ச்சி மற்றும் மழைக்கால நோயால் நஷ்டத்தில் தவிக்கும் பப்பாளி விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT