Published : 10 Dec 2020 03:16 AM
Last Updated : 10 Dec 2020 03:16 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தும், பெரும்பாலான ஏரிகள் போதிய நீர்வரத்தின்றி வறண்டு காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் பயிர்கள் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலும், தோட்டக்கலை பயிர்கள் 52 ஆயிரத்து 963 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டு வருகிறது. தென்பெண்ணை ஆறு மற்றும் ஏரிகள் கிருஷ்ணகிரி மாவட்ட பாசனத்தேவைக்கு உதவுகின்றன. ஏரிகளைப் பொறுத்தவரை பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் 89 ஏரிகளும், ஊராட்சிகளின் கட்டுப் பாட்டில் 1160 ஏரிகளும் உள்ளன.
தற்போது பெய்து வரும் மழையால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணைகள் மற்றும் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் பாரூர் ஏரி உட்பட சுமார் 56 ஏரிகள் மட்டுமே நிரம்பி உள்ளன.
ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், ஏரிகளில் பெரும்பாலானவை போதிய நீர்வரத்தின்றி வறண்டு காட்சியளிக்கின்றன.
சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணை நீரின்றி வறண்டு கிடக்கிறது. இந்த ஏரிகளை நிரப்பும் வகையில், தென்பெண்ணை ஆற்றில் செல்லும் உபரி நீரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் கால்வாய் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராம கவுண்டர் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை பரவலாகப் பெய்தும் பயனில்லை. தென்பெண்ணை ஆற்று நீர் மூலம் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளும், அவற்றின் இணைப்பு ஏரிகளும் மட்டுமே நிரம்பி உள்ளன.
மற்ற நீர்நிலைகள் வறண்டு இருப்பதற்கு நீர்ப்பாசனத் திட்டங்களை முறையாக செயல்படுத்தாததே காரணம். தென்பெண்ணை ஆற்றில் உபரியாகச் செல்லும் தண்ணீரை கால்வாய் மற்றும் மின் மோட்டார் மூலம் வறண்ட ஏரிகளில் நிரப்ப வேண்டும்.
தென்பெண்ணை ஆற்றில் 5 இடங்களில தடுப்பணை கட்டி தண்ணீர் தேக்கி வைக்கலாம். தற்போது பெய்து வரும் பரவலான மழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. ஆனால், பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காட்சியளிக்கின்றன,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT