Published : 09 Dec 2020 08:50 PM
Last Updated : 09 Dec 2020 08:50 PM
இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் சிறு, குறு விவசாயிகள் விளைவிக்கும் விவசாயிகளே தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை இச்சட்டத்தின் மூலம் கிடைக்காது, விவசாயிகளை பெருமளவில் தற்கொலைக்கு தூண்டக்கூடிய இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என குடியரசுத்தலைவரிடம் டி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பல கட்ட பேச்சு வார்த்தை நடந்தும் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சித்தலைவர்கள் ராகுல்காந்தி தலைமையில் குடியரசுத் தலைவரை இன்று சந்தித்தனர்.
இதுகுறித்து திமுக சார்பில் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
“டெல்லி சலோ என்ற செயல் முழக்கத்துடன், பல மாநிலங்களிலிருந்து பல நூறு மைல் தூரத்தைக் கடந்து, இந்திய நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டு, பசியும், பட்டினியுமாகக் காத்துக் கிடந்து, தங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏறக்குறைய ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பெருமக்கள், எஞ்சியிருக்கும் தங்கள் வாழ்வாதாரத்தையும், நாட்டின் முதுகெலும்பான வேளாண்மையையும் பாதுகாத்திட டிராக்டர்களுடன் சென்று, மத்திய பாஜக அரசு எதேச்சாதிகாரத்துடன் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தி, திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகிய எதிர்க்கட்சி தலைவர்கள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று (9.12.2020) மாலை 5.00 மணி அளவில் நேரில் சந்தித்து இதனுடன் இணைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவினை அளித்தனர்.
அப்போது, ’2018-ம் ஆண்டில், நாடாளுமன்றத்திலேயே எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி அளித்துவிட்டு, அந்த வாக்குறுதியை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது மத்திய பாஜக அரசு. இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் சிறு, குறு விவசாயிகள். இவர்கள் விளைவிக்கும் தங்கள் உற்பத்திப் பொருட்களை, வணிகர்கள் கேட்கும் விலைக்கு விற்கும் நிலையில் இருக்கிறார்களே தவிர, விவசாயிகளே தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை இச்சட்டத்தின் மூலம் கிடைக்காது.
எனவே, விவசாயிகளை பெருமளவில் தற்கொலைக்கு தூண்டக்கூடிய இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்’. என்று திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தார்”.
இவ்வாறு திமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT