Published : 09 Dec 2020 07:28 PM
Last Updated : 09 Dec 2020 07:28 PM
உச்ச நீதிமன்றத்தின் கண்டனக் கணைகள் அனைத்தும் ஜெயலலிதாவை நோக்கித்தான் உள்ளது. அவ்வளவு தெளிவாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தபின் அதை இல்லை என நீங்கள் மறுத்தால் உங்கள் நேர்மையை சந்தேகிக்க வேண்டியிருக்கும் என முதல்வர் பழனிசாமிக்கு ஆ.ராசா பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமிக்கு திமுக எம்.பி., ஆ.ராசா இன்று எழுதிய கடிதம்:
''திமுகவின் மீதும் தலைவர் கருணாநிதி மீதும் - மத்திய அமைச்சராகப் பணியாற்றி 2ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என் மீதும் கடந்த 03.12.2020 அன்று தொலைக்காட்சியில் தாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் விதமாக அதே தேதியில் நானும் ஊடகங்களைச் சந்தித்து யார் ஊழல்வாதி, எந்தக் கட்சி ஊழல் கட்சி என்பதைப் பகிரங்கமாகவும் பட்டவர்த்தனமாகவும் ஆதாரத்தோடு குறிப்பிட்டேன்.
திமுக மீது தாங்கள் தெரிவித்த வீராணம், சர்க்காரியா, 2ஜி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லையென்றும், ஆனால் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர் என்றும், அவர் சிறை செல்லக் காரணமாக இருந்த கீழமை நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதித்து உண்மையை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த என்னைக் கோட்டைக்கு அழையுங்கள் என்று வேண்டியதோடு, அப்போது உங்கள் அமைச்சரவையையும் - மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலையும் - மாநில அட்வகேட் ஜெனரலையும் அழையுங்கள் என்று பகிரங்க சவால் விட்டிருந்தேன்.
நாட்கள் பலவாகியும் தங்களுக்கு ஏனோ அந்தத் திராணியும் - தெம்பும் இல்லை என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்துள்ளார்கள். ஏனெனில் உங்கள் தலைவியின் மீது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடர்த்தி அத்தகையது. தீர்ப்பின் அடர்த்தி தெரிந்து நீங்கள் தொடர்ந்து அமைதி காத்திருந்தால் உங்கள் அரசியல் பண்பு சற்றே உயர்ந்திருக்கக் கூடும்.
என்னுடைய நேர்காணலில், நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் பொறுப்பேற்கும் அதேவேளையில், அவை பொய்யென்று நிரூபிக்க நீங்கள் எடுத்த பொய்க்கால் குதிரை முயற்சிகள் பலன் தராது என்பதை உங்களுக்கு உணர்த்தி, உங்களை நாகரிகமான ஆரோக்கியமான அரசியலுக்கு நெறிப்படுத்தவே இக்கடிதத்தை நான் எழுதுகிறேன்.
வீராணம் பற்றிய புகார் குறித்தோ - சர்க்காரியா கமிஷன் குறித்தோ - 2ஜி வழக்கு குறித்தோ தங்களால் ஏதும் ஆதாரத்தோடு பேச முடியாது என்று தெரிந்திருந்தும் உங்கள் ஊழலை மறைக்க அவ்வப்போது நீங்களும் உங்கள் சகாக்களும் விடும் ‘உதாரு’க்கும் உளறலுக்கும் எப்போதும் நீங்கள் வெட்கப்பட்டதில்லை. “விஞ்ஞான ரீதியாக நடைபெற்ற ஊழல்” என்று எந்த இடத்திலும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இல்லையென்று உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
2ஜி வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு (choreographed charge sheet) என்று நீதியரசர் ஓ.பி.சைனி கூறியதையும் உங்கள் சட்ட அறிஞர்கள் உங்களுக்குச் சொல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள். நீங்கள் என் சவாலை ஏற்காவிடினும், நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த உங்கள் 'அம்மா' மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆழமான கருத்துகளை, உங்களுக்கு கவனப்படுத்துகிறேன்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையை எதிர்கொண்ட எந்த அரசியல்வாதியும், உங்கள் தலைவியைப் போல் நீதிமன்றத் தாக்குதலுக்கு ஆளானதில்லை என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பகுதியிலிருந்து திறந்த மனநிலையில் உள்ள - சாதாரண அறிவுள்ள எவரும் அறியலாம். நீங்களும் அறிய வேண்டும் என விரும்புகிறேன்.
“சசிகலாவோ, சுதாகரனோ, இளவரசியோ அரசியல் சட்டத்தின்பால் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள் அல்ல. மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர்களும் அல்ல. அரசியல் சட்டத்தின் முகப்புரை பண்புகளுக்கு பொறுப்பாளிகளும் அல்ல. அவர்கள் அரசியல் சட்டத்தைப் படுகொலை செய்யுமிடத்திலும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனக் கணைகள், ஜெயலலிதாவை மட்டுமே நோக்கித்தான் என்று பிறர் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய நிலை, உங்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வளவு தெளிவாக உச்ச நீதிமன்றம் தோலுரித்த பிறகும், ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதாக நீங்களோ - உங்களின் பிரதிநிதிகளோ கூறுவீர்களேயானால், உங்களின் நேர்மையைச் சமூகம் சந்தேகித்தே தீரும்.
இவ்வளவு மோசமாக உச்ச நீதிமன்றத்தால் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை, எங்கு சென்றாலும் முன்னிறுத்தி, அவர் வழியில்தான் ஆட்சி நடைபெறும் என்று கூறுவது எவ்வளவு அருவருப்பு கலந்த இழிவு என்பதை உங்களால் உணர முடிகிறதோ இல்லையோ, பொது வாழ்வில் குறைந்தபட்ச நேர்மையை எதிர்பார்க்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுகிறீர்கள். அந்த நினைவிடத்தில் உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் வரிகளை எழுத முன்வருவீர்களா? பிஹார் மாநிலத்தில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான தன் தந்தை லாலு பிரசாத் யாதவின் படத்தைப் போடாமலும், அவர் பெயரை உச்சரிக்காமலும்தான் தேர்தல் களம் கண்டார் அவர் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ். தந்தையேயானாலும் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற அவரது தயக்கத்தில்தான் உண்மையும் நியாயமும் அவரிடத்தில் நிலைகொண்டன.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் ஆளாகி, உயர் நீதிமன்றத்தால் போதுமான ஆதாரம் உள்ளதென்றும், நீங்கள் முதல்வர் என்பதால் மத்திய புலனாய்வு அமைப்புதான் வழக்கை விசாரிக்க வேண்டுமென்றும், உயர் நீதிமன்றத் தீர்ப்பு உங்களுக்கு எதிராக வந்த பிறகும் உங்கள் தலைவியைப் போலவே சட்டத்தின் மூலை முடுக்கில் ஒளிந்துகொண்டு வரும் உங்களுக்கு, ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் பெயரையும், படத்தையும் முன்னிலைப்படுத்துவதில் தயக்கம் இருக்காது என்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
என்றாலும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். எது உண்மையென்று தெரிந்த பிறகாவது உண்மையை மறைப்பதையும், தகுதியற்ற சிலரை அனுப்பி பேட்டி என்ற பெயரால் பொய்களுக்கு மகுடம் சூட்டுவதையும் எதிர்காலத்திலாவது நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த வேண்டுகோள், உங்களுக்காக அல்ல, நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் மாண்பிற்காக''.
இவ்வாறு ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT