Published : 09 Dec 2020 06:37 PM
Last Updated : 09 Dec 2020 06:37 PM
ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். பிறகு கருத்துச் சொல்கிறேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (டிச.9) சிதம்பரம் வந்தார். அங்கு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது:
''கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தானே புயல், நீலம் புயல், கஜா, நிவர், தற்போது புரெவி புயல் என எந்தப் புயலாக இருந்தாலும் டிசம்பர் மாதம் வந்து பேரழிவைக் கொடுத்துச் செல்கிறது. கடலோரம் உள்ளதால் கடலூர் மாவட்டம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. எந்தப் புயலாக இருந்தாலும் முதலில் தேமுதிக களத்தில் இறங்கி மக்களுக்காகப் போராடும்.
சிதம்பரம், சீர்காழி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து மக்களைச் சந்தித்து தேமுதிக சார்பில் நிவாரணம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அனைத்துப் பிரச்சினைகளையும் நம்மால் தீர்க்க முடியாது. இருந்தாலும் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் .
ஆனால், ஆளுங்கட்சியினர் கவனத்திற்குக் கொண்டுசென்று மக்களுக்குத் தேவையானதைப் பெற்றுத் தரும் இயக்கம் தேமுதிக. சேதம் குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து, சென்றுள்ளனர். புயல் பாதிப்பின்போது விஜயகாந்த் கிராமம் கிராமமாகச் சென்று ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வயல்வெளிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால், அரசு எந்தவித உயிர்ச் சேதமும் இன்றி நடவடிக்கை எடுத்ததற்காகப் பாராட்டுகிறோம். விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீடு மறுக்கப்படுகிறது.
வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் விவசாயிகளும் மத்திய அரசும் விட்டுக்கொடுத்து, பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை நடந்தும் விவசாயிகள் பிடிவாதமாக இருப்பதால் பேச்சுவார்த்தை முறிந்து விடுகிறது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக உணர்கிறேன்.
பஞ்சாப்பில் கோதுமை விளைச்சல் அதிகமாக இருப்பதால் விவசாயிகளின் பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இருப்பதாக உணர்கிறேன்''.
இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் ரஜினிகாந்த், அதிமுக கூட்டணி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது பற்றிக் கேட்டதற்கு, ''ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். கட்சியின் பெயரைக் கூறட்டும். தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்கட்டும். பிறகு எங்கள் கருத்தைக் கூறுகிறேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT