Published : 09 Dec 2020 05:36 PM
Last Updated : 09 Dec 2020 05:36 PM
தூத்துக்குடியில் இன்று மழை பெய்யாமல் வெயில் அடித்த போதிலும் பல இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கியுள்ள மழை வெள்ளம் வடியாததால் மக்கள் தொடர்ந்து கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர் மழை:
புரெவி புயலின் தாக்கத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளைச் சூழந்து மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றக் கோரி நகரில் நேற்று மட்டும் 7 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி சார்பில் 250-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார் பம்புகள், 20 டேங்கர் லாரிகள், 5 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணிகள் இரவு, பகலாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்குப் பிறகு தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை பெய்யாததால் மாநகராட்சி ஊழியர்கள் சற்று நிம்மதியடைந்தனர். மேலும், இன்று பகல் முழுவதும் வெயில் அடித்தது மழைநீரை வெளியேற்றும் பணிக்கு சற்று உதவியாக இருந்தது.
மக்கள் அவதி:
இதன் காரணமாக முக்கிய சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் ஓரளவுக்கு வடிந்துவிட்டது. ஆனால், குடியிருப்புப் பகுதிகள், தாழ்வான இடங்களில் இன்னும் மழைநீர் பெருமளவில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக பிரையண்ட் நகர், சிதம்பரநகர், டூவிபுரம், அண்ணாநகர், தபால் தந்தி காலனி, ராஜீவ் நகர், கதிர்வேல் நகர், செயின் மேரீஸ் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி போன்ற இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். ஒரு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர் மற்றொரு பகுதியில் தேங்குவதாலும், ஊற்றுநீர் தொடர்ந்து பெருக்கெடுப்பதாலும் மழைநீரை வெளியேற்றும் பணி மாநகராட்சி ஊழியர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
மக்கள் போராட்டம்:
இந்நிலையில் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி டூவிபுரம் 2-வது தெருவில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே அப்பகுதி மக்கள் நேற்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அமைச்சரான அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மக்களுக்கு ஆதரவாக வந்து மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து உடனடியாக டேங்கர் லாரி மூலம் மழைநீரை உறிஞ்சி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல் தபால் தந்தி காலனி, ராஜீவ் நகர், கதிர்வேல் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அதன் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து தலைமையில் அந்த பகுதியில் தேங்கிய மழைநீரில் துணை துவைத்தும், தூண்டில் போட்டு மீன்பிடித்தும் நூதன போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தூத்துக்குடி நகரில் மழைநீர் தேங்கிய பகுதிகளையும், மழைநீரை வெளியேற்றும் பணிகளையும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தபால் தந்தி காலனி, பிரையண்ட் நகர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் பார்வையிட்ட அமைச்சர், மழைநீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜித் சிங் கலோன், மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மக்கனி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிரந்தரத் தீர்வு:
இயல்பை விட அதிகமான மழை பெய்யும் போது தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது இயல்பு தான். அதுபோல தான் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. 200-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. விரைவில் மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள் சகஜ நிலைக்கு திரும்பும்.
போராட்டங்கள் மூலம் மழைநீரை வெளியேற்ற முடியாது. ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் தான் மழைநீரை வெளியேற்ற முடியும். இந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தூத்துக்குடியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ரூ.73 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
இன்னும் 30 சதவீத பணிகளும் விரைவில் முடிவடையும். அடுத்த ஆண்டு மழை காலத்தில் இந்த பிரச்சினை இருக்காது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 637 குளங்கள் உள்ளன. இவைகளில் 80 சதவீத குளங்கள் முழுமையாக நிரம்பிவிட்டன. மாவட்டத்தில் இந்த ஆண்டு செழிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
மழை அளவு:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 43, காயல்பட்டினம் 65, குலசேகரன்பட்டினம் 19, விளாத்திகுளம் 8, கோவில்பட்டி 5.5, கீழ அரசடி 1, எட்டயபுரம் 5, சாத்தான்குளம் 32.8, ஸ்ரீவைகுண்டம் 5.5 மி.மீ. மழை பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT