Published : 09 Dec 2020 03:35 PM
Last Updated : 09 Dec 2020 03:35 PM
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.
தூத்துக்குடி விமான நிலைய சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.45 லட்சம் மதிப்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தை, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்து அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் கொண்டுவந்த மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 மாணவியருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
அரசு பள்ளிகளில் பயின்ற காயல்பட்டினத்தை சேர்ந்த ஆயிஷா ஜின்னீரா, சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சர்மிளா, வானரமுட்டியை சேர்ந்த சுதா, ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வேல்மதி ஆகியோருக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது.
இந்த நான்கு மாணவியரையும் பாராட்டி கேடயங்களை வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாணவியரின் படிப்பு முன் செலவுகளுக்காக ஆதவா அறக்கட்டளை மூலம் தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகையையும் வழங்கினார். அப்போது மாணவியரும், அவர்களது பெற்றோரும் அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி, 69 பெண்களுக்கு அம்மா இருச்சக்கர வாகனம், 12 கி.மீ., தொலைவை 1.22 மணி நேரத்தில் ஓடி கடந்து சாதனை படைத்து ஏசியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்த தூத்துக்குடியை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு ஆதவா அறக்கட்டளை சார்பில் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை, மேலும் பொது நூலகத்துறை சார்பில் 4 பேருக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, நூலக ஆர்வலர் விருது, சிறந்த நூலகங்களக்கான விருதுகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சட்ட பட்டதாரிகள் 10 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் தொழில் ஊக்கத் தொகை ஆகியவற்றையும் அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜித் சிங் கலோன், விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட நூலக அலுவலர் மா.ராம்சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT