Published : 09 Dec 2020 02:59 PM
Last Updated : 09 Dec 2020 02:59 PM

வேம்பார் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 34 மூடைகள் மஞ்சள் பறிமுதல்

கோவில்பட்டி

வேம்பாரில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 34 மூடை விரலி மஞ்சளை மரைன் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட மரைன் காவல் ஆய்வாளர் சைரஸ், உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வி, சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் காவலர்கள் நேற்று இரவு கடற்கரையோரப் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது வேம்பாரில் இருந்து பெரியசாமிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சந்தேகத்திற்கு இடமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனர்.

டிராக்டரில் சோதனையிட்ட போது, அதில் 34 நெகிழி சாக்கு மூடைகள் இருந்தன. போலீஸார் சோதனையிட்டு கொண்டிருந்தபோது, டிராக்டரை ஓட்டி வந்தவரும், டிராக்டர் உடன் 2 மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு காட்டுப்பகுதி வழியாக தப்பி ஓடி விட்டனர்.

சந்தேகமடைந்த போலீஸார் மூடைகளை பிரித்து பார்த்தபோது விரலி மஞ்சள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் தலா 35 கிலோ கொண்ட 34 மூடைகள் இருந்தன.

பெரியசாமிபுரம் பகுதி கடற்கரை வழியாக படகு மூலம் இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்த இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்த விரலி மஞ்சள் மூடைகளை மரைன் போலீஸார் சூரங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சூரங்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விரலி மஞ்சள் கடத்தலில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x