Published : 09 Dec 2020 02:03 PM
Last Updated : 09 Dec 2020 02:03 PM
திருச்சியில் அகில இந்திய வஉசி பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பெண் காவலர் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 சாதி உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கப் பரிந்துரை செய்யப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் கே.பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு, தமிழ்நாடு முழுவதும் வெள்ளாளர் மற்றும் வேளாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.
இதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அகில இந்திய வஉசி பேரவை (அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு) சார்பில் இன்று (டிச.9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்குப் பேரவையின் மாநிலத் தலைவர் மு.லட்சுமணன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான வி.கிருஷ்ணமூர்த்தி, மாநிலப் பொருளாளர் வயி.ச.வெங்கடாசலம், கவுரவத் தலைவர் எஸ்.ராமதாஸ், திருச்சி மாவட்டத் தலைவர் வி.என்.கண்ணதாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், எந்தச் சூழலிலும் வெள்ளாளர் மற்றும் வேளாளர் பட்டங்களை மாற்று சாதியினருக்கு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும், தமிழ்நாடு முதல்வரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து, பேரவையின் மாநிலத் தலைவர் லட்சுமணன், செய்தியாளர்களிடம் கூறும்போது, "எங்கள் கோரிக்கை தொடர்பாக அமைச்சர்கள் அனைவரிடமும் வலியுறுத்துவோம். எங்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்க வேண்டும். இல்லையெனில், பிற சமூகத்தினரையும் எங்களோடு இணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.
தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் முடிந்து அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றுவிட, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த இளைஞர்கள் உள்ளிட்டோர் திடீரென ரயில்வே ஜங்ஷனில் இருந்து மத்திய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார் அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து போகாமல் குரல் எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல் துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றபோது, காவல்துறையினருடன் கடுமையான தள்ளுமுள்ளு நேரிட்டது.
இதையடுத்து, காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனால், மறியலில் ஈடுபட்டவர்கள் ஒரே நேரத்தில் கலைந்து செல்ல முயன்றதால் அந்த இடமே ரகளையாக மாறியது. அங்கிருந்து ஓட முயன்றவர்களைக் காவல் துறையினர் துரத்தி துரத்திச் சென்று பிடித்து தங்கள் வேனில் ஏற்றினர். அப்போது, வேனில் இருந்து காவல் துறையினரை நோக்கி மதுபான பாட்டில் வீசப்பட்டது. அந்த பாட்டில் பெண் காவலர் மீது விழுந்து சாலையில் சிதறியது. இதில் பெண் காவலரின் இடது கை வீங்கியது.
தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வஉசி பேரவையினர் வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT