Published : 09 Dec 2020 12:32 PM
Last Updated : 09 Dec 2020 12:32 PM
வாரிசு அரசியலால் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலை மூடி மறைக்கவே திமுக அவதூறு பிரச்சாரம் செய்வதாக ஆ.ராசாவுக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டம் முழுதும் வடகிழக்குப் பருவமழையால் பகுதியாக வீடுகள் சேதமடைந்து 59 நபர்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிதியுதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் விசாகன் பங்கேற்றனர்.
பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது.
36 மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, நிவர், புரெவி புயலில் உயிரிழப்பு, பொருட்கள் சேதம் தவிர்க்கப்பட்டது.
தமிழக முதல்வர் இரவு முழுவதும் கண்விழித்து புயலின் நிலைகளை கேட்டறிந்தார். மத்தியக் குழுவிடம் பாதிப்புகள் குறித்து முதல்வர் விரிவாக எடுத்துக் கூறி உள்ளார்,
புயலால் மழை நீர் தேங்கியதைத் தவிர எந்தவொரு சேதமும் ஏற்பட்டவில்லை, மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிக்காக ரூ.3,700 கோடி தேவைப்படுவதாக முதல்வர் மத்தியக் குழுவிடம் வலியுறுத்தி உள்ளார்
மத்திய அரசு ஏற்கெனவே 650 கோடி பேரிடர் நிவாரணமாக வழங்கிய நிலையில் மேலும் 680 கோடி நிவாரண நிதி வழங்கி உள்ளது. அதனை உலகப் பேரிடரான கோவிட் 19-காக செலவிடபட்டது.
மதுரை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து கனக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. பயிர் சேதாரம் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும், 5 புயல்கள் வருவதாக வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம், மக்கள் அதிகாரபூர்வமான செய்தியை நம்ப வேண்டும், புரெவி புயல் முழுதும் வலுவிழந்து விட்டது, முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் ஸ்டாலினுக்கு முழுமையாக சேரவில்லையா எனத் தெரியவில்லை,
மத்திய பேரிடர் நிதியை எதிர்பார்க்காமல் மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது, ஸ்டாலின் குற்றச்சாட்டு வைக்கும் முன்னரே முதல்வர் நடவடிக்கைகள் எடுத்து விடுகிறார்.
மழைக்காலங்களில் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மழைக்கால விபத்துகளுக்கு அரசியல் காரணங்கள் சொல்லக் கூடாது,
வேளாண் திருத்த மசோதா பற்றி முதல்வர் தெளிவாக விளக்கத்தைக் கூறி உள்ளார். அவர் ஒரு விவசாயி என்பதால் அதை ஆராய்ந்து கூறியுள்ளார். இதனை ஒட்டுமொத்த விவசாயிகளும் ஏற்றுகொண்டுள்ளனர்
3 வேளாண் சட்டங்களால் விளை பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம். ஒட்டுமொத்த விவசாயிகளும் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழக விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் பாரத் பந்த தோல்வி அடைந்து விட்டது,
2016 திமுக தேர்தல் அறிக்கையில் பக்கம் 23-ல் விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பதற்கு ஓர் அமைப்பை கொண்டு வரும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு இன்றைக்கு மத்திய அரசுக்கு எதிராக திமுக போராடுகிறது.
திமுகவின் இந்த பகல் வேஷசத்தை விவசாயிகள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.
தமிழகத்தில் 100 சதவீத பயிர்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பயிர்க் காப்பீடு செய்யப்பட்டவில்லை. பச்சைத் துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது. விவசாயிகளை எதிர்கட்சிகள் ஏமாற்ற நினைக்கிறது,
சர்காரியா கமிஷனில் ஏன் குற்றச்சாட்டு நிரூபணம் செய்யவில்லை என அனைவருக்கும் தெரியும். சர்காரியா கமிஷனில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்னென்ன முயற்சிகள் மேற்க் கொள்ளப்பட்டது என அனைவருக்கும் தெரியும்,
அதிமுக தலைமைக்கு துணையாக இருக்கவே நாங்கள் பணியாற்றிய வருகிறோம், திமுகவில் கிளைச் செயலாளராக கூட இல்லாமல் உதயநிதி உயர் பதவிக்கு வந்துள்ளார், உதயநிதிக்கு வாழ்த்து சொல்லி விட்டு தான் திமுகவினர் கட்சிப் பணியை தொடங்குகிறார்கள், வாரிசு அரசியல் மூலம் கட்சியையும் சொத்துக்களையும் கபளீகரம் செய்யும் முயற்சியால் திமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுக உட்கட்சிப் பூசலை மறைக்கவே ஜெயலலிதாவைப் பற்றியும் முதல்வர் பழனிசாமி குறித்தும் அவதூறாகப் பேசி வருகிறார்கள். திமுகவின் பேச்சால் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது மக்களும் கொதிப்படைந்துள்ளனர்.
ஜெயலலிதா இல்லாத காலத்தில் அவரை அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட வழக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகவால் தொடுக்கப்பட்டது. ஆனால் ராஜா மீது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் புகார் தொடுக்கப்பட்டு அதில் அவர் சிறைக்கு சென்றார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் 2 ஜி வழக்கு நிலுவையில் உள்ளதை ஆ.ராசா நினைவில் கொள்ள வேண்டும். 2 ஜி வழக்கு நிலுவையில் உள்ளபோது எப்படி பொது வெளியில் விவாதிக்க முடியும்,
வாய்த் துடுக்காக ஆ.ராசா பேசினால் அதிமுகவினர் பதில் பேசுவதற்கு ரெம்ப நேரமாகது. ஆ.ராசா பொது வெளியில் மிகக் கவனமாக பேச வேண்டும். ஆ.ராசா பேச்சை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,
உலகத்தையே உலுக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற வாட்டர் கேட் ஊழலைக் காட்டிலும் 2ஜி ஊழல் செய்ததுதான் திமுக.
ராஜாவை நீதிமன்றம் நிரபராதி என்று விடுவிக்கவில்லை. உரிய வகையில் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் நீதிமன்றம் முன்பு சமர்ப்பிக்கத் தவறிவிட்டார்கள் என்று நீதிபதிகள் கூறி உளளனர். இப்போதும் ராஜா மீது மேல்முறையீடு உள்ளது ராஜா தண்டனைக்குக் காத்திருக்கும் குற்றவாளி.
ஆ.ராசாவின் பேச்சுக்கு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" எனக் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT