Published : 20 Oct 2015 02:28 PM
Last Updated : 20 Oct 2015 02:28 PM
கண்தானம், ரத்ததானம், உடல்தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பனியன் தொழிலாளி அனைவரையும் கவர்கிறார்.
பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பேண்ட், சட்டையை அணிந்தபடி கன்னியாகுமரியில் ஒருவர் சுற்றுலாப் பயணிகளை தேடித்தேடிச் சென்று பேசிக்கொண்டிருந்தார். பலரும் அவரை கேலி, கிண்டல் செய்தபோதும், அதை பொருட்படுத்தாமல் அடுத்தவர்களை தேடிச் சென்றார்.
அருகில் சென்றபோது, உடல்தானம், கண்தானம், ரத்ததானம், உறுப்பு தானம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள், அவரது சட்டை, பேண்ட் முழுவதும் பொறிக்கப்பட்டு இருந்தன. சுற்றுலா பயணிகளிடமும் அவர் அதையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
திருப்பூர் தொழிலாளி
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வரும் அவர் சிவசுப்பிரமணியன் (56). அவர் கூறும்போது, `நான் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன். திருப்பூரில் வசித்து வருகிறேன். 2008-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி இந்திய ராணுவத்தினருக்கு உடல்களை தானம் செய்வோம்... என நானும், எனது மனைவியும் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அதற்கான பதிவும் செய்துகொண்டோம்.
2011-ம் ஆண்டிலிருந்து `தேசம் காப்போம்’ என்னும் அறக்கட்டளையை இருவரும் தொடங்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தோம். கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி எனது மனைவி நுரையீரல் புற்றுநோயால் இறந்துவிட்டார்.
புற்றுநோயால் அவரது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக வழங்க இயலாத நிலையில் கண்களை மட்டும் தானமாக கொடுத்தோம்.
மனைவி இறந்த பின்பு நான் மட்டும் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறேன். எனது மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதுவரை 24 முறை ரத்ததானம் செய்துள்ளேன். உடல்தானம், ரத்ததானம், கண்தானம், கட்டாய ஹெல்மெட் போன்ற விழிப்புணர்வை சாகும்வரை ஏற்படுத்திக் கொண்டே இருப்பேன்.
கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி வரை 32 மாவட்டங்களிலும் விழிப்புணர்வை நடத்திவிட்டேன். நான் விழிப்புணர்வுக்கு செல்லுமிடமெல்லாம் தமிழக காவல்துறையினர் ஆதரவழித்து வருவது என்னை உற்சாகமடையச் செய்கிறது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT