Published : 09 Dec 2020 03:15 AM
Last Updated : 09 Dec 2020 03:15 AM
கட்சி கரைவேட்டி கட்டாமல் திராவிட கொள்கை பிடிப்போடு தனது இறுதி காலம் வரை வாழ்ந்து மறைந்துள்ளார் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா (86).
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சொந்த ஊராக கொண்டவர் எஸ்.ஆர்.ராதா. குடும்பத்தினர் பக்தி நெறியுடன் இருந்தபோதிலும் இவர், பெரியார், அண்ணாவின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தில் சேர்ந்தார்.
பின்னர் திமுகவில் சேர்ந்து பணியாற்றி வந்த இவர், எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது, அக்கட்சியில் இணைந்தார்.
1977 சட்டப்பேரவை தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வீட்டு வசதித் துறை அமைச்சரானார்.
எம்ஜிஆர் தன் கட்சியின் அடையாளமான இரட்டை இலை சின்னம், அண்ணா உருவம் பதித்த கருப்பு சிவப்பு கொடியை பிரபலப்படுத்த, அவற்றை கட்சியினர் உடலில் பச்சைக் குத்திக்கொள்ள வேண்டும் என கூறியபோது, இந்தச் செயல் காட்டுமிராண்டித்தனம் என கூறி, அதை எதிர்த்தவர் எஸ்.ஆர்.ராதா.
“அரசியல் களத்தில் எளிமையாகவும், கொள்கை பிடிப்போடும் வாழ்ந்தவர். கட்சியின் அடையாளமான கரை வேட்டியை கட்டாமல், உள்ளத்தில் இருந்தால் போதும் எனக் கூறி, திராவிடக் கொள்கைப் பற்றோடு இறுதிக் காலம் வரை வாழ்ந்தவர் எஸ்.ஆர்.ராதா’’ என அதிமுகவினர் தெரிவித்தனர்.
எஸ்.ஆர்.ராதாவுக்கு சென்னை பெசன்ட் நகரில் எம்ஜிஆர் வழங்கிய வீட்டில் தான் தற்போது வசித்து வந்தார்.
கடந்த வாரம் அவருக்கு சிறுநீரக பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டபோதும், கொள்கையில் உறுதியாக இருந்ததால், அரசு மருத்துவனை தான் பொதுமக்களுக்கான மருத்துவமனை எனக் கூறி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அங்கு நேற்று அவர் காலமானார். இதையடுத்து அவரது உடல் கும்பகோணம் துவரங்குறிச்சியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT