Published : 12 Oct 2015 04:28 PM
Last Updated : 12 Oct 2015 04:28 PM
பத்மநாபபுரம் அரண்மனையில் தமிழக, கேரள ஒற்றுமையை பறைசாற்றும் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்து தேவாரகட்டு சரஸ்வதி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலைகள் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக ஊர்வலமாக திருவனந்தபுரம் புறப்பட் டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம், திருவிதாங்கூர் சமஸ்தானத் தின் தலைநகராக இருந்தபோது பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத் திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்பின்பு 1840-ம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இருந்து நவராத்திரி விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் பங்கேற்பது வழக்கம்.
திருவனந்தபுரத்தில் 13-ம் தேதி நவராத்திரி விழாவில் இச்சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படு வதை முன்னிட்டு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை நேற்று முன்தினமே பல்லக்கில் பத்மநாபபுரம் அரண்மனை அருகே உள்ள நீலகண்டசுவாமி கோயிலை அடைந்தது.
இதைப்போல் குமாரகோயில் வேளிமலை முருகன் சிலையும் பத்மநாபபு ரத்தை வந்தடைந்தது. இந்நிலையில் நேற்று பத்மநாபபுரம் அரண்மனையில் தமிழக, கேரள ஒற்றுமையை பறைசாற்றும் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி மற்றும் சுவாமி சிலைகள் கேரளா பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி
சுவாமி சிலைகளின் முன்னே கொண்டு செல்லப்படும் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நேற்று காலையில் அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடந்தது.
கேரள ஆளுநர் சதாசிவம், கேரள அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், மாவட்ட நீதிபதி சதிகுமார், எஸ்.பி மணிவண்ணன், ஆர்டிஓ ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உடைவாளை ஆளுநர் சதாசிவத்திடம் கேரள தொல்லியல்துறை அதிகாரி பிரேம்குமார் எடுத்துக் கொடுத்தார். அதை அவர் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் பொன் சுவாமிநாதனிடம் ஒப்படைத்தார்.
பல்லக்குகளில் சுவாமி சிலைகள் பவனி
இதைத்தொடர்ந்து சுவாமி சிலைகள் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. தமிழக, கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை மேற்கொண்டனர். செண்டைமேளத்துடன் கலைஞர்களின் கதகளி, மயிலாட்டம் போன்றவை நடந்தன. பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலை, யானை மீது ஊர்வலமாக முன்னே செல்ல அதைத் தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் முருகன் ஆகிய சிலைகள் பல்லக்குகளில் பின்தொடர்ந்தன.
கேரளத்தில் வரவேற்பு
சுவாமி சிலைகள் பவனி நேற்று இரவு குழித்துறை மகாதேவர் கோயிலை சென்றடைந்தது. பின்னர் இன்று காலை அங்கிருந்து புறப்படும் சுவாமி சிலைகளுக்கு களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் பெண்கள் தாலப்பொலி ஏந்தி வரவேற்பு அளிக்கின்றனர். நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலை சிலைகள் சென்றடைந்ததும் அங்கு பூஜைகள் நடத்தப்படும்.
நாளை திருவனந்தபுரம் செல்லும் சுவாமி சிலைகளுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது. சரஸ்வதிதேவி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் கோட்டையில் உள்ள நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை குமாரசுவாமி ஆரியசாலை சிவன் கோயிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை செந்திட்டை பகவதி அம்மன் கோயிலிலும் வைத்து நவராத்திரியை முன்னிட்டு 9 நாள் பூஜைகள் நடத்தப்படுகிறது. பூஜை முடிந்த பின்பு மீண்டும் சுவாமி சிலைகள் கன்னியாகுமரி மாவட்டம் வருகிறது.
பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்த உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேரள ஆளுநர் சதாசிவம். அருகில் கேரள அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான்.(வலது) பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கேரளாவுக்கு ஊர்வலமாக புறப்பட்ட சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலைகள்.
இது மத நிகழ்வல்ல, இரு மாநில நல்லுறவு
விழாவில் பங்கேற்ற கேரள அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது “நவராத்திரி விழாவுக்கான இந்த வரவேற்பு நிகழ்ச்சி தமிழக, கேரள பாரம்பரியத்தைப் போற்றுகிறது. இது மத நிகழ்வல்ல. தமிழகம், கேரள மாநில நல்லுறவை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சி. தமிழக, கேரள அதிகாரிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT