Published : 08 Dec 2020 06:54 PM
Last Updated : 08 Dec 2020 06:54 PM

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் மறியல்: எம்.எல்.ஏ. உட்பட 358 பேர் கைது

கோவில்பட்டி

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உட்பட 358 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்களைக் கண்டித்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விளாத்திகுளத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

பேருந்து நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயன், நகர திமுக செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் ஜெயக்குமார், சின்னமாரிமுத்து, மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் புவிராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், குறிஞ்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 230 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதே போல், புதியம்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு நடந்த மறியலில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா, விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராகவன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அழகு உள்ளிட்ட 5 பெண்கள் உட்பட 128 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்;

புதிய வேளாண் திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கோவில்பட்டி அருகே வில்லிசேரி விலக்கு அருகே அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை போலீஸார் தடுத்ததைடுத்து வில்லிசேரி விலக்கு அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார், மதிமுக ஒன்றியச் செயலாளர் அழகர்சாமி, ராஜகுரு, சந்தானம், காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, திமுகவைச் சேர்ந்த முருகன், ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமசாமி மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன், துணை தலைவர் சாமியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் வடக்கு மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x