Published : 08 Dec 2020 06:58 PM
Last Updated : 08 Dec 2020 06:58 PM

கரோனா நெருக்கடி நிலையில் புதிய சாலை அவசியமில்லை; எட்டுவழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை

எட்டுவழிச் சாலை விவகாரத்தில் பல வாதங்களை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, ஏற்கெனவே மூன்று சாலைகள் இருக்கும்போது நான்காவது சாலை அவசியமில்லை என்பதும், விவசாய நிலங்கள், நீராதாரங்கள், காடுகள், பாசனக் கிணறுகள், விவசாயிகளின் வீடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவது குறித்துத் தீர்ப்பில் இடம்பெறாதது கிராமப்புற மக்களின் நலன்கள் மீது உச்ச நீதிமன்றத்திற்கு அக்கறையில்லையோ என்ற கேள்வி எழுகிறது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“சென்னையையும் - சேலத்தையும் இணைக்கும் 276 கி.மீ. நீளமுள்ள 8 வழிச் சாலையை அமைத்திட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. இச்சாலையை அமைத்திட ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

இச்சாலை அமைப்பதற்கு சுமார் 7500 ஏக்கர் சாகுபடி நிலங்களும், வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காட்டு நிலங்களும் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தன. மேலும் குடிநீர் மற்றும் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் பல ஏரிகள், நீர்நிலைகள், விவசாயக் கிணறுகள் அனைத்தும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்க்க வேண்டியுள்ளது. சில கிராமங்களில் வீடுகள் இடிபடுவதால் கிராமங்களே காலி செய்யும் நிலைமை உள்ளது. எனவே, இந்த 8 வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டுமென பலகட்டப் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராம விவசாயிகளும் ஈடுபட்டார்கள்.

அந்த விவசாயிகளையும், அவர்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்பியவர்களையும் காவல்துறையைக் கொண்டு மிரட்டிக் கைது செய்து, பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைத்துவிட்டுக் கட்டாயமாக நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு 4.9.2019 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான ஆணை வெளியிட்டது தவறு எனவும், அந்த அரசாணையை ரத்து செய்ததுடன், கையகப்படுத்தப்பட்ட நிலங்களைச் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வசமே ஒப்படைக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியது.

கிராமப்புற மக்களின் நலன்களைப் புறக்கணித்த தீர்ப்பு

இந்த உத்தரவினை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதுடெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டினை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல் நிலம் கையகப்படுத்துவதற்கு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தது.

அத்துடன், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடைமையாளர்களின் பெயரில் ஆவணங்களை மாற்றித் தர வேண்டுமென உத்தரவிட்டு, மத்திய, மாநில அரசுகளை இடித்துக் கூறிய உச்ச நீதிமன்றம், நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி 8 வழிச் சாலையை அமைக்கும் பணியைத் தொடரலாம் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பல வாதங்களை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, ஏற்கெனவே மூன்று சாலைகள் இருக்கும்போது நான்காவது சாலை அவசியமில்லை என்பதும், விவசாய நிலங்கள், நீராதாரங்கள், காடுகள், பாசனக் கிணறுகள், விவசாயிகளின் வீடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவது குறித்துத் தீர்ப்பில் இடம்பெறாதது கிராமப்புற மக்களின் நலன்கள் மீது உச்ச நீதிமன்றத்திற்கு அக்கறையில்லையோ என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கிராமப்புற மக்களுடைய வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் வகையில் சென்னை - சேலம் 8 வழிச் சாலை அமைக்கும் பணியினைத் தொடர வேண்டாமெனவும், போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க ஏற்கெனவே உள்ள சாலைகளை அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

மேலும், கரோனா நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய இந்த நேரத்தில் ரூ.10,000 கோடி செலவில் புதிய சாலை அவசியமற்றது என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x