Published : 08 Dec 2020 05:44 PM
Last Updated : 08 Dec 2020 05:44 PM
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 14 இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 2 எம்எல்ஏக்கல் உள்ளிட்ட 1,224 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
அதன்படி இன்று பாரத் பந்த் என்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அரசு, தனியார் அலுவலகங்கள், பேருந்து, ஆட்டோ, லாரி, டாக்ஸி போன்றவை வழக்கம் போல் இயங்கின.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிட்டு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி அண்ணா சிலை சந்திப்பு அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் ஞானசேகரன், மதிமுக சார்பில் நக்கீரன், மகாராஜன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் முகமது இக்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 5 பெண்கள் உள்ளிட்ட 87 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகே மறியல் செய்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதிருஷ்ணன் தலைமையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 20 பெண்கள் உள்ளிட்ட 230 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகே மறியல் செய்த திமுக எம்எல்ஏ சண்முகையா தலைமையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 6 பெண்கள் உள்ளிட்ட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், தூத்துக்குடி முத்தையாபுரம், தாளமுத்துநகர் டேவிஸ்புரம் சந்திப்பு, புதுக்கோட்டை, உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், ஏரல், சாத்தான்குளம், விளாத்திகுளம் என 12 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும், கடம்பூர், கோவில்பட்டியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 14 இடங்களிலும் சேர்த்து மொத்தம் 96 பெண்கள் உள்ளிட்ட 1,224 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், செய்துங்கநல்லூர், தென்திருப்பேரை ஆகிய இடங்களில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருந்து மற்றும் பால் கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்த போராட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT