Published : 08 Dec 2020 04:30 PM
Last Updated : 08 Dec 2020 04:30 PM
வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரியும், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன.
போக்குவரத்து வழக்கம்போல் இயங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
திண்டுக்கல் நகரில் கடைகளை அடைக்கச் சொல்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர்கள் பாலபாரதி, பாண்டி, மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பேருந்து நிலையம் அருகே ஊர்வலமாகச் சென்றனர்.
இவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெரியார் சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டு பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்த எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரத்தில் திமுக எம்.எல்.ஏ., அர.சக்கரபாணி தலைமையில் ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பழநியில் திமுக எம்.எல்.ஏ., இ.பெ.செந்தில்குமார் தலைமையிலும், நத்தத்தில் திமுக எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம் தலைமையிலும் மறியல் போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்று கைதாகினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர், குஜிலியம்பாறை உள்ளிட்ட 32 இடங்களில் வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 160 பெண்கள் உட்பட 2000 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT